திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, லடாக்கின் உயரிய சிவிலியன் கவுரவமான ‘dPal rNgam Duston’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மனித குலத்திற்கு, குறிப்பாக யூனியன் பிரதேசத்திற்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆறாவது முறையாக வழங்கப்படும் இந்த விருதை லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், இந்த முறை தலாய் லாமாவுக்கு வழங்கியுள்ளது. லடாக் நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 15ஆம் தேதி, லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 87 வயதான தலாய் லாமா பயணம் மேற்கொண்டிருந்தார். விருதை அளித்ததற்காக நன்றி தெரிவித்த தலாய் லாமா, லடாக்கில் மத நல்லிணக்கத்தை பேணுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "லடாக் மற்றும் திபெத் மத மற்றும் கலாசார ஒற்றுமைகளுடன் வலிமைமிக்க சிந்து நதியால் இணைக்கப்பட்டுள்ளது. மாறிவரும் தட்பவெப்ப நிலை எனது கவலைக்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் ஒவ்வொருவரும் தங்கள் செயலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து லடாக் எம்பி ஜம்யாங் செரிங் நம்க்யால் கூறுகையில், "லடாக் தனது உயரிய விருதை 14 வது தலாய் லாமாவுக்கு இந்த நல்ல சந்தர்ப்பத்தில் வழங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். தலாய் லாமாவுக்கு வழங்கப்பட்ட மரியாதைக்காக தாஷி கியால்சன் தலைமையிலான லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
லடாக் மக்களின் அன்பு, மரியாதை மற்றும் அர்ப்பணிப்பின் உண்மையான பிரதிபலிப்பாக அமைதி, இரக்கம் ஆகியவற்றின் தீபத்தை ஏற்றி வைத்த தலாய் லாமாக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
எம்பி ஜம்யாங் செரிங் நம்க்யால், கியால்சன் இருவரும் தலாய் லாமாவுக்கு மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்