இந்திய சுதந்திர போராட்டம், மக்களின் இயக்கமாக மாறியதற்கு முக்கிய காரணம் பெண்கள். ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் கீழ் ஆண்கள், பெண்கள் என அனைவரும் எவ்விதப் பாகுபாடும் இன்றி ஒடுக்கப்பட்டாலும், இந்தியர்களுக்குள்ளேயே பெண்களுக்கு எதிராக கடும் ஒடுக்குறை அரங்கேறியது.


ஆனால், அதையும் மீறி ஆயிரக்கணக்கான பெண்கள் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். சிலர் அதற்காகத் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்தனர். இன்னும் சிலரோ உயிரைத் துச்சமென மதித்து, நாட்டின் விடுதலை ஒன்றே குறிக்கோளாக இருந்து விடுதலை வேள்விக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள், சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டது மட்டும் இன்றி, அதை முன்னெடுத்து சென்றனர். ஆனால், அவர்களை பற்றி நம் வரலாற்றில் போதுமான அளவு ஆவணப்படுத்தவில்லை.


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், போதுமான அங்கீகாரம் வழங்கப்படாத தமிழ்நாட்டை சேர்ந்த பெண் சுதந்திர போராட்ட வீரர்களை இந்த தொகுப்பில் காணலாம்.


வேலு நாச்சியார்:


ராணி வேலு நாச்சியார் 18ஆம் நூற்றாண்டில் சிவகங்கை அரசியாக இருந்தவர். போரின்போது ஆயுதத்தை எப்படி பயன்படுத்துவது, தற்காப்பு கலைகள், பல்வேறு போர் முறைகளில் பயிற்சி பெற்றவராக திகழ்ந்தார். இவரது கணவர், ஆங்கிலேயர்களுடன் போரிடும்போது கொல்லப்பட்டார். அப்போதுதான், போர்க்களத்தில் நேரடியாக களம் இறங்கினார் வேலு நாச்சியார்.


ஹைதர் அலி, தலித் சமூகத்தை சேர்ந்த தளபதிகள், நிலப்பிரபுக்களின் ஆதரவுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலாகப் போராடிய இந்தியாவின் தலைசிறந்த பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இந்திய வரலாற்றில் இவரை போதுமான அளவுக்கு ஆவணப்படுத்தவில்லை என வரலாற்றாசிரியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டின் வரலாற்றில் இவருக்கு என தனத்துவமான இடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழர்கள் இவரை வீரமங்கை என்று குறிப்பிடுகின்றனர்.


கடலூர் அஞ்சலையம்மாள்:


கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகரில் கடந்த 1890ஆம்  ஆண்டு பிறந்தவர் அஞ்சலை அம்மாள். ஐந்தாம் வகுப்பு வரையே படித்த இவர், சிறு வயது முதலே சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். கடந்த 1921ஆம் ஆண்டு, நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். 


இதில் பங்கேற்றதன் மூலம், தென்னிந்தியாவில் இருந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தன்னுடையது என்று இல்லாமல் தனது குடும்பத்தினருக்கு என இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பெரும் பணத்தை செலவழித்தவர்.


கமலா ராமசாமி:



இந்திய விடுதலை போராட்ட வீரரான டி.எஸ்.எஸ்.ராஜனின் பேரன் ராமசாமியை திருமணம் செய்து கொண்ட கமலா, தீவிரமான காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த அவர், மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டார். குறிப்பாக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்துக்காக மாணவர்கள் அறிவித்த கடையடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நான்கு பெண்களில் கமலாவும் ஒருவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார். பல முறை சிறைக்குச் சென்றுள்ளனர். 


மக்கள் நலனுக்காகவே செயல்பட்டுவந்த கமலா ராமசாமி 1946இல் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல், விடுதலை பெற்ற பிறகு 1947இல் ராணுவப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


லட்சுமி சாகல்:


கடந்த 1914 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி சுவாமிநாதன்-அம்மு தம்பதிக்கு மகளாக சென்னையில் பிறந்தவர் லட்சுமி சாகல். இவருடைய தந்தை  சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவருடைய தாய் அம்மு சுவாமிநாதன், பாலக்காட்டில் சமூக சேவை செய்து வந்தார். இளம் வயதிலேயே சமூக சேவை,  சுதந்திர போராட்டம் போன்றவற்றில் ஆர்வமாக இருந்தார் லட்சுமி. 


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைக்குத் தலைமை தாங்கிய இவர், 1938ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தார். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், அவர் குடும்பமும் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியது. 26 வயது நடந்துகொண்டிருந்தபோது, அவர் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார். அங்கு சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு அவரின் வாழ்க்கையை மாற்றியது.


கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்:





திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியில் பிறந்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். சிறுவயதிலயே தந்தையை இழந்து, ஏழ்மை நிலையில் தவித்தபோதும் பள்ளிக் கல்வியை பல இன்னல்களுடன் முடித்தார். இதை தொடர்ந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், மதுரையில் பட்டம் முடித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். தான் சார்ந்த சமூக மக்களுக்காகவும் ஏழைகளின் நலனுக்காகவும் தொடர்ந்து இயங்கினார்.


காந்தியக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டார். கடந்த 1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு போராடியதால் பல ஆண்டுகள் சிறையிலே கழித்தார். இந்திய சுதந்திரம் பெற்ற பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றிருந்தவர் தன்னுடைய காதல் திருமணத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1950ஆம் ஆண்டே செய்து கொண்டார்.