இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திரம், நமக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. பொதுவாக, வரலாறு திரும்பும் என சொல்வார்கள். எனவே, கிடைத்த சுதந்திரத்தை தக்க வைத்து கொள்ள கடந்த காலத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சுதந்திர போராட்டத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு சிறந்த புத்தகங்களின் பட்டியலை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
கிஷ்வர் தேசாய் எழுதியுள்ள 'ஜாலியன்வாலா பாக், 1919: தி ரியல் ஸ்டோரி
பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக அற வழியில் போராட மக்கள் குவிந்திருந்தனர். ஜெனரல் டயர் உத்தரவில் ஆங்கிலேய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள், அப்பாவி மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது. நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக மாறிய ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றிய இந்த புத்தகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? டயரின் கொடூரமான செயலுக்கு காரணம் என்ன என்பதை புத்தகத்தில் தெளிவாகி விளக்கியிருக்கிறார் கிஷ்வர் தேசாய்.
சசி தரூர் எழுதிய 'ஆன் எரா ஆஃப் டார்க்னஸ்'
விரிவான ஆராய்ச்சி, தெளிவான பார்வை, வியக்கவைக்கும் அறிவாற்றல என தன்னுடைய முழு திறனையும் கொண்டு
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை விளக்கியிருக்கிறார் சசி தரூர். ஆங்கிலேயே காலனியாதிக்கம் இந்தியாவை எப்படி சுரண்டியது? நமது இயற்கை வளங்களை எப்படி சூரையாடினர்கள்? ஆங்கிலேய ஆட்சியால் இந்தியாவுக்கு குறிப்பிடத்தகுந்த பயன் கிடைத்தது என்ற வாதம் எவ்வளவு பொய்யானது என்பதை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது. ஆங்கிலேய காலனியாதிக்கம் பற்றி பரப்பப்பட்ட பொய் தகவல்களை இந்த புத்தகம் அமல்படுத்துகிறது.
அஞ்சல் மல்ஹோத்ரா எழுதிய 'ரெம்னன்ட்ஸ் ஆஃப் ஏ செப்பரேஷன்'
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அறிவிக்கப்பட்ட பிரிவினையால் மக்கள் எவ்வளவு பெரிய பேரழிவை எதிர்கொண்டார்கள் என்பதை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது 'ரெம்னன்ட்ஸ் ஆஃப் ஏ செப்பரேஷன்' புத்தகம். காலத்தால் அழியாத பொருள்களின் வழியாக கதை சொல்லியிருக்கும் அஞ்சல் மல்ஹோத்ரா, தனது எழுத்துநடையின் மூலம் வரலாற்றை இந்த தலைமுறை இளைஞருக்கு சேர்த்துள்ளார். முத்து சரத்தின் வழியாகவும் நோட்டு புத்தகங்களில் உள்ள கவிதைகள் வழியாகவும் அகதி சான்றிதழ் வழியாகவும் அதன் உரிமையாளர்கள் பற்றியும் அவர்களின் கடந்த காலத்தை குறித்தும் வரலாற்றின் வலி, தியாகம், வலி ஆகியவற்றை விவரித்திருக்கிறார் அஞ்சல் மல்ஹோத்ரா.
ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா'
இந்திய வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள மிகச் சிறந்த புத்தகமாக ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' கருதப்படுகிறது. நாட்டின் முதல் பிரதமரான நேரு, 1942 முதல் 1946 வரையில், தனது சிறைவாசத்தின்போது இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி ஆங்கிலேயர்கள் ஆட்சி வரையிலான வரலாற்றை தன்னுடைய தனித்துவமான அறிவாற்றலின் வழியாக விவரித்திருக்கிறார் நேரு.
இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு:
இந்திய வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். நவீன இந்தியாவின் வரலாற்றை காந்திக்கு முன்பு, காந்திக்குப் பிறகு என்றுதான் பிரிக்கவேண்டியிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்ற கதை பலராலும் பல முறை சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் என்ன ஆனது, இன்றுள்ள நிலைக்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம் என்னும் கதையைக் கோர்வையாகவும் எளிமையாகவும் ஆழமாகவும் விவரிக்கும் நூல் நீண்ட காலம் எழுதப்படாமலேயே இருந்தது. அந்தக் குறையைப் போக்கிய முக்கியமான படைப்பு ராமச்சந்திர குஹாவின் India After Gandhi (2007).
ஃப்ரீடம் அட் மிட்நைட்:
இந்தியச் சுதந்திரம் என்பது உலக வரலாற்றின் ஆகச் சிக்கலான திருப்புமுனைகளில் ஒன்று. 500க்கும் மேற்பட்ட சமஸ்தானத்து மன்னர்களைச் சமாளிப்பது, பிரிவினைக் கோரிக்கையை எதிர்கொள்வது என்று ஆங்கிலேய அரசும் காங்கிரஸ் தலைவர்களும் கடும் பதற்றத்தில் இருந்த காலகட்டம் அது. வரலாறு காணாத வன்முறை அரங்கேறிய அந்தக் காலகட்டத்தினை அதன் பல்வேறு சிக்கல்களுடன் நுணுக்கமாகவும் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பதிவுசெய்யும் நூல் இது. நவீன இந்தியாவின் உருவாக்கம் பற்றியும் அதை உருவாக்கியதில் ஆங்கிலேயர்களுக்கும் காந்தி, நேரு போன்றவர்களுக்கும் இருந்த பங்கினைப் பற்றியும் அறிய விரும்புபவர்கள் தவறவிடக் கூடாத நூல் இது.
மேக்கர்ஸ் ஆப் மாடர்ன் இந்தியா:
இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அவற்றை நகர்ப்புறப் புரட்சி, தொழில் புரட்சி, தேசியப் புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி, சமூக நீதிப் புரட்சி என வகைப்படுத்தலாம். நவீன இந்தியா என்பது இந்தப் புரட்சிகளின் விளைவாக உருவானதுதான்.
— மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர், ராம்மோகன் ராய், ரவீந்திரநாத் தாகூர், பாலகங்காதர திலகர், ஈ.வெ. ராமசாமி, முகம்மது அலி ஜின்னா, சி.ராஜகோபாலச்சாரி, ஜெயப்பிரகாஷ் நாராயண், கோபால கிருஷ்ண கோகலே, சையது அகமது கான், ஜோதிராவ் ஃபுலே, தாராபாய் ஷிண்டே, கமலாதேவி சட்டோபாத்யாய், எம்.எஸ்.கோல்வல்கர், ராம் மனோகர் லோஹியா, வெரியர் எல்வின், ஹமீத் தல்வாய் —
நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் என்று இவர்களைக் குறிப்பிடமுடியும். இந்தியா என்றொரு தேசம் உருவானதற்கும் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நிமிடம் வரை உயிர்ப் புடன் நீடிப்பதற்கும் காரணம் இவர்கள்தாம்.
பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களை முன்வைத்து இவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் வாழ்வை அடியோடி மாற்றியமைத்தன. நவீன இந்தியாவை வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் உதவிய இந்த அசாதாரணமான ஆளுமைகளின் பங்களிப்பை அவர்களுடைய படைப்புகள்மூலம் அறிமுகப்படுத்துகிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா.