ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி, ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்குபெற்ற இந்த தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில், இந்தியா,தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதன்படி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது.
இச்சூழலில், இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், ரோகித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 47 ரன்கள் எடுத்தார்.
இறுதி போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:
மறுபுறம் களத்தில் நின்ற சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த விராட் கோலி 54 ரன்களும் கே.எல்.ராகுல் 66 ரன்கள் எடுத்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
பின்னர், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், டேவிட் வார்னர் 7 ரன்களில் விக்கெடை பறிகொடுக்க மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுக்க டிராவிஸ் ஹெட் கடைசி வரை களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றர்.
ஆறுதல் கூறிய பிரதமர் மோடி:
அதிரடியாக விளையாடிய அவர், 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய மார்னஸ் லாபுசாக்னே, 110 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில், உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டியில் அவர்களின் பாராட்டுக்குரிய ஆட்டம், அற்புதமான வெற்றியில் நிறைவு அடைந்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு ஆறுதல் கூறிய அவர், "அன்புள்ள இந்திய அணி. உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம்" என பதிவிட்டுள்ளார்.