நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. உலகளவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம். கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 3,32,730 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு படுக்கை வசதி இல்லாத சூழலும் ஏற்பட்டுள்ளது. 


குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசம் அடைந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால்  5 நிமிடத்திற்கு  ஒருவர்  உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியிலுள்ள மருத்துவமனைகள் பலவற்றில் படுக்கை வசதிகள் இல்லாமல் மக்கள் திணறி வருகின்றனர். 


அத்துடன் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 25 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் டெல்லியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம்செய்ய போதிய இடங்கள் இல்லாததால் அடக்கம் செய்ய இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் சூழலில் உருவாகியுள்ளது. 



மும்பை புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே கடந்த புதன்கிழமை மகாராஷ்டிராவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் 22 பேர் உயிரிழந்தனர். 


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளின் உறவினர்கள் ஆக்சிஜன் சிலிண்டருக்காக காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரியளவில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலையில் இந்தியா மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. உலகளவில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒரே நாளில் 2,97,430 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதை தற்போது இந்தியா தாண்டி உள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக  கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 




இந்தச் சூழலில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் உயர் அலுவலர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.  கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.