தேசிய ஊடக நிறுவனமான டைனிக் பாஸ்கர் அலுவலகங்களில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு செய்ததாக அந்த செய்தி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் டைனிக் பாஸ்கரின் டெல்லி, மும்பை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இன்று சோதனை நடத்தினார்கள். அந்த குழும உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
டைனிக் பாஸ்கர் நிறுவனத்தின் போபால், ஜெய்ப்பூர், இந்தோர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள அலுவலகங்களில் தற்போது ரெய்டு நடைபெற்றுவருவதாக அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இது தவிர உத்திரப்பிரதேச தொலைக்காட்சி ஊடகமான பாரத் சமாசார் நிறுவனத்திலும் தற்போது வருமான வரி ரெய்டு நடைபெற்று வருகிறது. வரி மோசடி தொடர்பான வலுவான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில்தான் இந்த திடீர் வருமான வரி ரெய்டு நடைபெறுவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பாரத் சமாசார் நிறுவனத்தின் அண்மையை ரிப்போர்ட் ஒன்று உத்திரப்பிரதேச அரசை கடுமையாக விமர்சிப்பதாக அமைந்திருந்தது. அதே சமயம் ‘டைனிக் பாஸ்கர்’ கொரோனா தொடர்பான அரசின் நிர்வாகத் தவறுகளைச் சுட்டிக்காட்டியதால்தான் அந்த நிறுவனத்தின் மீது ரெய்டு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி இந்த ரெய்டினை ஜனநாயகத்தை நெறிக்க நினைக்கும் ஒரு வன்மையான முயற்சி எனக் கடுமையான விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது அறிக்கையில் இதனை அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என விமர்சித்துள்ளார். மோடியின் நிர்வாகத்திறன் குறைபாட்டைச் சுட்டிக்காட்டியதற்கான பலனை டைனிக் பாஸ்கர் அனுபவித்துக் கொண்டிருக்கிறது என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரும் செய்தித்தாள் நிறுவனங்களில் ஒன்றான டைனிக் பாஸ்கர் கொரோனா பேரிடர்கால குறைபாடுகளை தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தது.
உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரின் கங்கைக்கரையோரம் கொரோனா உடல்கள் மிதந்ததை தனது செய்திகளில் அந்த ஊடகம் பதிவு செய்திருந்தது. இந்த ஊடகத்தின் ஆசிரியர் ஓம் கௌர் கொரோனா இரண்டாம் அலை குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையினை எழுதியிருந்தார். இதற்கிடையேதான் தற்போது இந்த அறிவிக்கப்படாத ரெய்டு நடைபெற்றுள்ளது.