பாசம் காட்டினதற்கு எல்லாம் வழக்கா என்று கேட்டால். ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் மந்தகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிஃப். 35 வயதான இவர் கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் ஒரு பறவையை மீட்டார்.


சாரஸ் க்ரேன்ஸ் வகையைச் சேர்ந்த பறவை ஒன்று மந்தகா பகுதியில் ஆண் பறவை ஒன்று கால் ஒடிந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்தது. அதை மீட்ட நான் அதற்கு காலில் மஞ்சளும், கடுகு எண்ணெய்யும் போட்டேன். பின்னர் அத்துடன் ஒரு தட்டையான குச்சியைக்கட்டி கட்டு போட்டுவிட்டேன். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்ததால் பறவையின் கால் சீரானது. எங்கள் வீட்டு கோழிகளுக்கு கால் உடைந்தால் இதைத்தான் செய்வோம். இப்போது அதையே இந்தப் பறவைக்கும் செய்தேன். பறவை குணமானது. அதன் பின்னர் அதற்கும் எனக்கும் இடையே நெருக்கம் உருவானது. அந்தப் பறவையால் பறக்க முடிந்தும்கூட அது என்னைவிட்டு பறக்கவில்லை. எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கும். நான் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் எங்கு சென்றாலும் அதுவும் வரும். வனப்பகுதி செல்லத் தோன்றினால் செல்லும் ஆனால் மாலை திரும்பவும் எனது வீட்டிற்கு வந்துவிடும். என்னுடன் அரிசி, பருப்பு, பிரெட் சாப்பிடும். வனத்தில் பூச்சிகள், கிழங்குகளை சாப்பிட்டு வரும். இப்படியாக நாங்கள் அன்போடு இருந்தோம். வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மார்ச் 9 ஆம் தேதியன்று முகமது ஆரிஃப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி 11 மணிக்குள் முகமது ஆரிஃப் விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாரஸ் க்ரேன் என்பது ஈரநிலத்தில் வாழக்கூடிய கொக்கு இனம். இது உத்தரப்பிரதேசத்தின் மாநிலப் பறவையும் கூட. இது 1972 வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பறவை இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. சாரஸ் க்ரேன் தான் உலகிலேயே பறக்கும் தன்மை கொண்ட மிக உயரமான பறவை. இது 150 செ.மீ உயரமானது. 


ஆனால் முகமது ஆரிஃப் தான் அந்தப் பறவையை ஒருபோதும் சிறைபிடித்து வைக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் பறவை கான்பூர் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்தப் பறவை உணவு உண்ணாமல் 40 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துள்ளது. முகமது ஆரிஃபை பிரிந்த சோகத்தில் பறவை உணவை உட்கொள்ள மறுத்துள்ளது. இந்நிலையில் அந்தப் பறவைக்கு 5 கிலோ சிறிய மீன்களும் சோளமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பறவை அதை சாப்பிடாமல் தவிர்த்துள்ளது. அதனை சோதித்த மருத்துவர்கள் அந்தப் பறவை மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர். இப்படியும் ஒரு பாசப் பிணைப்பா என்று சரணாலய ஊழியர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.