தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற பட்டனை அழுத்தக்கூடிய ஒரு வசதி 2023 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வந்த புதிதில் பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் இருந்து வந்த நிலையில், பின்னர் அது வாக்காளர்களுக்கு பழகிய விஷயமாக மாறி விட்டது. எந்த தொகுதியிலும் வேட்பாளா்களைக் காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் வந்திருந்தால், யாரையும் வெற்றி பெற்றவராக அறிவிக்காமல் அந்தத் தொகுதியில் மறுதோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இதில் ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளருக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக சீா்திருத்த சங்கம் தற்போது பரிந்துரை செய்துள்ளது.


1.29 கோடி ஓட்டுக்கள்


இந்த நிலையில், 2018 முதல் 2022 வரை உள்ள 5 ஆண்டுகளில், நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல்கள் ஆவியவற்றில் நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகள் குறித்து ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு மொத்தம் 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் போடப்பட்டுள்ளன எனத்தெரிய வந்துள்ளது. 



சட்டசபை தேர்தல்கள்


இந்த ஐந்து வருடங்களில் சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் மட்டும் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975 ஓட்டுக்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 1.06 சதவிகிதம் ஆகும். இந்த சட்டப்பேரவை தேர்தல்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும், 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 ஓட்டுகள் நோட்டவுக்குப் போடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கைதான் நோட்டாவுக்கு ஒரு மாநிலத்தில் கிடைத்த அதிகபட்ச ஓட்டுகள் ஆகும். மிசோரம் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 2 ஆயிரத்து 917 ஓட்டுகள்தான் நோட்டா ஒரு மாநிலத்தில் வாங்கிய குறைந்தபட்ச ஓட்டுக்கள் ஆகும். 


தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


தொகுதி வாரியாக


சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக பார்த்தால், மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில், நோட்டாவுக்கு அதிகபட்சமாக 27,500 போ் வாக்களித்து இருந்தது அதிகபட்சமாக உள்ளது. குறைந்தபட்சமாக அருணாசல பிரதேச மாநிலம் தலி தொகுதியில், வெறும் 9 போ் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். அருணாசல பிரதேசத்தின் திரங், அலாங் ஈஸ்ட், யாச்சுலி, நாகாலாந்தின் வட அங்கமி தொகுதிகளில் வேட்பாளா்கள் போட்டியின்றி வென்றதால், நோட்டாவுக்கு எவ்வித வாக்குகளும் பதிவாக வாய்ப்புகள் ஏற்படவில்லை.



நாடாளுமன்ற தேர்தல்


நாடாளுமன்ற தேர்தலில் பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் கிடைத்த 51 ஆயிரத்து 660 ஓட்டுகள்தான் ஒரு தொகுதியில் நோட்டவுக்கு போடப்பட்ட அதிகபட்ச ஓட்டுகள் ஆகும். லட்சத்தீவு தொகுதியில் கிடைத்த 100 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள் ஆகும் என வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


5 மாநில தேர்தல் 2022


குறைந்தபட்சமாக 2022-இல் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நோட்டாவுக்கு 0.70 சதவீத வாக்குகள் (8,15,430) பதிவாகி இருந்தன. கோவாவில் 10,629 வாக்குகளும், மணிப்பூரில் 10,349 வாக்குகளும், பஞ்சாபில் 1,10,308 வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 6,37,304 வாக்குகளும், உத்தரகண்டில் 46,840 வாக்குகளும் நோட்டாவுக்கு பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.


அதிக ‘நோட்டா’ வாக்குகள் பதிவான மாநிலங்கள்



  • 2019 - மகாராஷ்டிரா - 7,42,134

  • 2020 - பிகாா் - 7,06,252

  • 2022 - உத்தர பிரதேசம் - 6,21,186

  • 2021 - மேற்கு வங்கம்- 5,23,001

  • 2018 - சத்தீஸ்கா் - 2,70,730


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.