அகில இந்திய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியதாக இன்று அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கண்டனங்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக முறையிடப்பட்டது. இதனால், வருமானவரித்துறை தரப்பில் இருந்து தற்காலிகமாக வங்கிக் கணக்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். 

காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர், அஜய் மக்கென் கூறுகையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை நசுக்கும் செயல். இது தொடர்பாக வருமானவரித்துறையை நாடியபோது, கடந்த 2018 -2019 ஆம் நிதியாண்டின் செலவு கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக காங்கிரஸ் சமர்ப்பித்ததாக தெரிவித்தற்காக தற்போது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக கூறியதாக கூறினார்.  மேலும் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக நிதி பெறும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. முடகப்பட்ட கணக்குகளில் ரூபாய் 210 கோடி உள்ளது எனக் கூறினார். 

Continues below advertisement

இது தொடர்பாக அவர் கூறுகையில், நாங்கள் கொடுத்த காசோலைகள் வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது, வங்கியில் விசாரித்துப் பார்த்தோம். அப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது, வருமானவரித்துறையால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நிதியான ரூபாய் 210 கோடி வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

இது ஜனநாயகம் இல்லை; இந்த செயலுக்குப் பின்னால் பாஜகவின் அரசியல் அழுத்தம், இந்த செயல் மூலம்  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் மக்களிடம் நியாயம் கேட்கிறோம்.

இந்த விவகாரம் தற்போது வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் உள்ள நிலையில், முடக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் கட்சி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால், முந்தைய தகவலை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். கட்சி கணக்குகள் முடக்கப்பட்டதை நேற்று அறிந்த காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் விவேக் தங்கா, மொத்தம் நான்கு வங்கிக் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸின் காசோலைகளை ஏற்கவோ அல்லது மதிக்கவோ கூடாது என்று வங்கிகளுக்கு  வருமானவரித்துறை தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது, முடக்கப்பட்ட நிதியை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

2018-19 தேர்தல் ஆண்டில், காங்கிரஸ் கட்சி தனது கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக சமர்ப்பித்தது, ஆனால் கணக்குகளை முடக்குவது ஒரு தீவிர நடவடிக்கை என்று மக்கென் தெரிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாத வழக்குகளும் முன்னுதாரணங்களும் உள்ளன என்றும் மக்கென் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், பயப்படாதீர்கள் மோடிஜி. காங்கிரஸின் பலம் பணத்தில் இல்லை. காங்கிரஸின் பலம் மக்கள்தான். ஜனநாயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை காங்கிரஸ் கட்சியினர் பலமாக எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள் என தெரிவித்திருந்தார்.