காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கென் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நாங்கள் கொடுத்த காசோலைகள் வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது, வங்கியில் விசாரித்துப் பார்த்தோம். அப்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது, வருமானவரித்துறையால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நிதியான ரூபாய் 210 கோடி வருமானவரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது ஜனநாயகம் இல்லை; இந்த செயலுக்குப் பின்னால் பாஜகவின் அரசியல் அழுத்தம், இந்த செயல் மூலம் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் மக்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இந்த விவகாரம் தற்போது வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் உள்ள நிலையில், முடக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் கட்சி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால், முந்தைய தகவலை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். கட்சி கணக்குகள் முடக்கப்பட்டதை நேற்று அறிந்த காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் விவேக் தங்கா, மொத்தம் நான்கு வங்கிக் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸின் காசோலைகளை ஏற்கவோ அல்லது மதிக்கவோ கூடாது என்று வங்கிகளுக்கு வருமானவரித்துறை தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது, முடக்கப்பட்ட நிதியை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2018-19 தேர்தல் ஆண்டில், காங்கிரஸ் கட்சி தனது கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக சமர்ப்பித்தது, ஆனால் கணக்குகளை முடக்குவது ஒரு தீவிர நடவடிக்கை என்று மக்கென் தெரிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாத வழக்குகளும் முன்னுதாரணங்களும் உள்ளன என்றும் மக்கென் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி பலம் பணத்தினால் இல்லை, காங்கிரஸ் கட்சியின் பலம் மக்கள்தான். ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒவ்வொரு காங்கிரஸ் கட்சிக்காரும் மிகவும் உறுதியுடன் எதிர்த்து போராடுவார்கள் என தெரிவித்துள்ளார்.