ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தான் மாநிலத்தில் திருநங்கை  ஒருவருக்கு முதல் முறையாக பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் வசிக்கும் நூர் ஷெகாவத்துக்கு வழங்கினார்.


ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் பதிவு செய்யப்படும்  என்று பன்வர்லால் பைர்வா செய்தியாளர்களிடம் கூறினார். திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


ஆணாகப் பிறந்து தன்னை பெண்ணாக உணர்ந்த பின்னர் தனது பாலினத்தை மற்றிக்கொண்டுள்ளார் நூர் ஷெகாவத். பிறப்பின் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற நூர் ஷெகாவத், அப்போது முதலே தனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை கவனித்து வந்துள்ளார். அதன் பின்னர் தனது பாலினத்தை மாற்றிக்கொண்ட நூர் ஷெகாவத் தற்போது திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் கைவிடப்படும் திருநங்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவி வருகிறார். 


 தனக்கான பிறப்புச் சான்றிதழை வாங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த  நூர் ஷெகாவத், மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க  புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் உதவும் என்று கூறிய அவர், அடுத்தகட்டமாக  திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்விகளில் இடஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.