ஆப்ரிக்காவின் ஈகுவேடேரியல் கினியா நாட்டில் ஒரு வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் எபோலா வைரஸ் தொற்றை ஒத்து இருப்பதாக மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். இந்த வைரஸ் தொற்றுடன் வரும் நோயாளிகள் காய்ச்சல், நெஞ்சு வலி போன்ற தொந்தரவுகளுடன் வருகின்றனர். இதுவரை 9 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனராம். அறிகுறிகள் தீவிரமாகும்போது மரணம் சம்பவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக பெரிய அளவில் தொற்று ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,.மார்பர்க் வைரஸால் இவ்வளவு பெரிய அளவில் தொற்று பரவல் இருப்பது இதுவே முதல்முறை என்று WHO அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  மேலும் இந்தத் தொற்று பரவலை தடுப்பதற்காக உலக சுகாதார அமைப்பு சிறப்பு அவசரகால சுகாதார நிபுணர்களை பணித்துள்ளது. 


இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர் மாட்ஸிதிஸோ மோயிட்டி கூறுகையில், கினியாவில் மார்பர்க் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உயிரிழப்பு விகிதம் 88% என்றளவில் கூட அதிகரிக்கலாம். இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி இருக்கிறது என்றார்.


இந்த மார்பர்க் வைரஸ் பாதிப்பு என்பது எபோலா வைரஸ் பாதிப்பை போல் இருக்கும். ஏனென்றால் இரண்டும் ஒரே குடும்ப வகையை சேர்ந்தது தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எபோலா வைரஸால் ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்ட நிலையில் தற்போது அதற்கு தடுப்பூசி வந்துவிட்டது.


எபோலாவையும் அறிந்து கொள்வோம்:


எபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 15019 பேர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர். எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்றோட்டம் ஏற்படும். 2013 முதல் 2016 வரை எபோலா மேற்கு ஆப்பிரிக்காவைக் கடுமையாக அச்சுறுத்தியது. சுமார் 11,000 பேர் இந்தக் காலகட்டத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எபோலா தொற்று ஏற்பட்டால், அந்தப் பகுதியை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள மக்களுக்கு எபோலா பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் மற்றவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்துவதன் மூலம் எபோலா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நூற்றாண்டில் கொரோனா வைரஸ் தான் இதுவரை உலகையே ஆட்டிப்படைத்த வைரஸாக இருக்கிறது. இந்நிலையில் இந்த மார்பர்க் வைரஸ் தற்போது புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.