பிபிசி இந்தியாவின் அலுவலகங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை மிகுந்த கவலை அளிப்பதாக EGI  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


வருமான வரித்துறை சோதனை:


இன்று காலை பிபிசி-ன் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இது தொடர்பாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆளும் அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசாங்கத்தின் முகமைகள் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் தொடர்ச்சியான போக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.



BBC Threat: பிபிசியில் சோதனை.. செய்தி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்.. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா அறிக்கை


சமீபத்தில், குஜராத் கலவரம் குறித்து, பிபிசி 2 ஆவணப்படங்களை வெளியிட்டிருந்தது. அதில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்தும், தற்போதைய சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் ஆவணப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பிபிசி-க்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 


மக்களாட்சிக்கு எதிரான போக்கு:


இதற்கு முன்பு நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்டரி செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். எப்பொழுது எல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைக்கப்படுகிறதோ, அப்பொழுது எல்லா அரசாங்கத்தின் முகமைகள் செய்தி நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என இஜிஐ தெரிவித்துள்ளது. 


இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் செயல் . இது மக்களாட்சிக்கு எதிரான போக்கு.சோதனைகளானது வரையறுக்கப்பட்ட விதிகளுக்குள் இருக்க வேண்டும். மேலும் ஊடகங்களின் சுதந்தரத்தை பாதிக்காத வகையில் அரசாங்கம் இருக்க வேண்டும் எனவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.






இந்நிலையில் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவும், பிபிசி செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு கணடனம் தெரிவித்துள்ளது.





பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையானது, மிரட்டும் போக்கு எனவும் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.