கடந்த ஜூலை 2022 வரை மட்டும் நாட்டில் 4.71 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப வன்முறை வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆராய அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது குறித்தான வழக்கு ஒன்றில் கருத்து கூறியுள்ள உச்சநீதிமன்றம் அது தொடர்பாகத் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.


நீதிபதிகள் எஸ்.ஆர்.பட் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணையில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு அதிகாரி இருப்பது மிகவும் போதுமானதாக இருக்காது, ஏனெனில் தற்போதைய வழக்கு நிலவரப்படி அவர்கள் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 500 முதல் 600 வரையிலான வழக்குகளைக் கையாளுவார்கள் என்று கூறியுள்ளது. 


மேலும், இந்தச் சூழ்நிலையில், மத்திய  அரசு இந்த சட்டம் குறித்து தீவிரமாக இயங்கவேண்டியது அவசியம்," என்றும் திருமண வீடுகளில் துஷ்பிரயோகம் செய்யப்படும் பெண்களுக்கு பயனுள்ள சட்ட உதவிகளை வழங்குதல் மற்றும் அவர்களுக்கான தங்குமிடங்களை உருவாக்குதல் குறித்து நாடு முழுவதும் போதுமான உள்கட்டமைப்பு கோரிய மனுவை விசாரித்த பெஞ்ச் கூறியுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த கூட்டத்தில் நிதி, உள்துறை மற்றும் சமூக நீதி அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவர்களின் பரிந்துரையாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக, குடும்ப வன்முறைகள் தொடர்பான இதே போன்றதொரு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கணவனை இழந்த பெண்:


மேற்குவங்கத்தை சேர்ந்த நந்திதா சர்கார் என்பவரது கணவர் கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அடுத்த நாளே அவரிடமிருந்து சீதன பொருட்கள், விலையுயர்ந்த நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை, கணவர் வீட்டு தரப்பினர் பறித்துக் கொண்டுள்ளனர். அதோடு, வெத்து பத்திரங்களில் கையெழுத்திட்டு மகள் நந்திதாவை அழைத்து செல்லுங்கள் என அவரது பெற்றோரையும்,  சம்பந்தி வீட்டு தரப்பினர் வற்புறுத்தியுள்ளனர்.


நீதிமன்றங்களில் மாறுபட்ட தீர்ப்பு:


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹவுரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நந்திதா சர்க்கார் PWDV சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, கணவர் வீட்டு தரப்பில் இருந்து தனக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட கோரினார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  நந்திதா சர்காருக்கு இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து, அந்த பெண்ணின் மாமியர் வீட்டு தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.