Ind Pak IMF: சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனை தவறான வழியில் பாகிஸ்தான் பயன்படுத்தக்கூடும் என இந்தியா குற்றம்சாட்டி இருந்தது.

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்:

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, பாகிஸ்தானுக்கு புதியதாக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. காலநிலை மீள்தன்மை திட்டத்தின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதுபோக, பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கும் மீள்தன்மை திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை விடுவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், இந்த கடனுதவி திட்டத்தின் கீழ், சவாலான சர்வதேச சூழலுக்கு மத்தியிலும், பொருளாதாரம் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது” என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

34 ஆண்டுகளில் 28 கடன்கள்:

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய இந்தியா, “ பாகிஸ்தான் நீண்டகாலமாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடாக இருந்து வருகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிபந்தனைகளை செயல்படுத்துவதிலும் கடைப்பிடிப்பதிலும் மிகவும் மோசமான பதிவுகளைக் கொண்டுள்ளது. 1989 முதல் 35 ஆண்டுகளில், பாகிஸ்தான் 28 ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்றுள்ளது. 2019 முதல் கடந்த 5 ஆண்டுகளில், 4 சர்வதேச நாணய நிதியத் திட்டங்கள் உள்ளன. அதன் மூலம் முன்னேற்றம் பெற்றிருந்தால், அந்நாடு மீண்டும் மீண்டும் கடன் பெற வேண்டிய அவசியமில்லை.

பொருளாதார விவகாரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆழமாக வேரூன்றிய தலையீடு, கொள்கை சறுக்கல்கள் மற்றும் சீர்திருத்தங்களை தலைகீழாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஒரு சிவில் அரசாங்கம் இப்போது ஆட்சியில் இருந்தாலும் கூட, ராணுவம் உள்நாட்டு அரசியலில் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. தற்போது சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், அதையும் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடும்” எச்சரித்து இருந்தது. ஆனால், அதையும் மீறி வாக்கெடுப்பின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் அளித்துள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதார நிலவரம்:

  • 2024 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் 130 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • மக்கள் தொகையில் 2.5 சதவீதம் பேர் மட்டுமே வரி வருமானத்தை தாக்கல் செய்கிறார்கள்.
  • 2023 நிதியாண்டில் 40.2 சதவிகிதமாக இருந்த வறுமை விகிதம் 2024 நிதியாண்டில் 40.5 சதவிகிதமாக உயர்ந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் பணவீக்கம் 38 சதவிகிதமாக உயர்ந்தது, அதன் பின்னர் சற்று குறைந்துள்ளது
  • 2023 ஆம் ஆண்டில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை 9.7 சதவிகிதமாக இருந்தது.
  • 2024 உலகளாவிய பசி குறியீட்டில் 127 நாடுகளில் பாகிஸ்தான் 109வது இடத்தில் உள்ளது.
  • பாகிஸ்தானின் 82 சதவிகித மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது

”நோ” சொல்லும் பாகிஸ்தான்

சர்வதேச நாணய நிதியம் பல்வேறு முறை அழுத்தம் கொடுத்தும் பாகிஸ்தான் சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. குறிப்பாக வரி வசூலிப்பை விரிவுபடுத்துவது, நிலைத்தன்மையற்ற மானியங்களை ரத்து செய்வது, கையாள முடியாத அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது போன்றவற்றில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. இதனால் பல்வேறு ஆய்வுகளின் முடிவில், எரிபொருள் மற்றும் மின்சார விலை உயர்ந்து, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு போராட்டங்களில் குதிப்பதோடு, சமூகத்தில் அமைதியற்ற நிலை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட பாகிஸ்தான்:

பாகிஸ்தான் CPEC தொடர்பான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால், 500 மில்லியன் கடன் வழங்கும் திட்டத்தை உலக வங்கி ரத்து செய்துள்ளது. இதுபோக புதியதாக உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களையும் ,வரும் ஜுன் மாதம் வரை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவிடம் எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எதிர்காலங்களிலும் உலக வங்கியின் ஆதரவையும்,கடனுதவியையும் பெறுவது பாகிஸ்தானுக்கு சிக்கலாக மாறியுள்ளது.