நாட்டின் தலைசிறந்த கல்வி நிலைங்களாக திகழும் ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை:
அதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போவாய் பகுதியில் அமைந்துள்ள ஐஐடி கல்லூரியின் மாணவர் விடுதியில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இருப்பினும், ஐஐடி கல்லூரியில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, வழக்கின் விசாரணை காவல்துறையிடம் இருந்து சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்த மாணவரின் தந்தை பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறை தன் குடும்பத்தை கொடுமைபடுத்தியதாக கூறி மாணவரின் தந்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார்.
மாணவரின் தந்தை பகீர் குற்றச்சாட்டு:
அந்த கடிதத்தில், "கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுத்தனர். காவல்துறை மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) உறுப்பினர்களின் அணுகுமுறையால் குடும்பத்தினர் முற்றிலும் அதிர்ச்சியும் மனமுடைந்தும் உள்ளனர்.
எனது மகன் இறந்த வழக்கில் மார்ச் 16 அன்று நான் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்வதற்காக நான் எனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தில் இருந்து போவாய் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், நாங்கள் கோரிக்கை விடுத்தும் போவாய் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டது. வழக்கை விசாரிக்க எஸ்ஐடி அமைக்கப்பட்டதால், எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது. மேலும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த புகார் எஸ்ஐடிக்கு அனுப்பப்படும்.
அந்த நேரத்தில், காவல்நிலையத்தில் இருந்த காவல்துறை துணை ஆணையர் ஒத்துழைக்கவில்லை. FIR பதிவு செய்வதற்கான கோரிக்கையை ஏற்கவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் நகல், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மும்பை காவல்துறை ஆணையர் விவேக் பன்சல்கர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட மாணவன் விட்டு சென்ற கடிதம் காவல்துறையிடம் சிக்கியுள்ளது. இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதில், தன்னுடன் வகுப்பில் படித்த சக மாணவனே தற்கொலைக்கு காரணம் என சோலங்கி குறிப்பிட்டிருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.