புல்லி பாய் எனும் செயலியில் கடந்த ஒன்றாம் தேதி பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், இஸ்லாமிய பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அந்த செயலியில் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் புல்லி பாய் செயலியின் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா (இந்துத்துவா ஆதரவாளர்), ஸ்வேதா சிங், மயங்க் ராவல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து புல்லி பாய் செயலியின் மாஸ்டர் மைண்டான 21 வயது நிரம்பிய நீரஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் பதுங்கியிருந்த இவரை டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், இந்த செயலி உண்மையில் நவம்பரில் உருவாக்கப்பட்டது என்றும், டிசம்பர் 31 ஆம் தேதி பொதுவெளியில் பரவியது என்றும், அதன்பின் மும்பை காவல்துறையை கேலி செய்ய பயன்படுத்திய @giyu44 டிவிட்டர் பக்கத்தையும் பிஷ்னோய் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
அவர் தனது ட்வீட்டில் மும்பை காவல்துறையை "ஸ்லம்பாய் போலீஸ்" என்று குறிப்பிட்டார். மேலும், தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், தான் சரி என்று நினைத்ததைச் செய்ததாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி போலீஸ் காவலில் அவர் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
15 வயது முதலே ஹேக்கிங் குறித்து நீரஜ் படித்து வந்தது தெரியவந்தது. அதோடு, இந்தியா, பாகிஸ்தானில் பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் இணையதளங்களை இவர் ஹேக் செய்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
நீரஜின் தந்தை தஷ்ரத் பிஷ்னோய் கூறுகையில், "என் மகன் பத்தாம் வகுப்பில் 86% மதிப்பெண் எடுத்ததால் அசாம் அரசு அவனுக்கு லேப்டாப் கொடுத்தது. எந்நேரமும் அதிலேதான் இருப்பார்.
அதனை அவன் படிப்புக்காக பயன்படுத்தினான். ஜோர்ஹட்டில் உள்ள எங்கள் அண்டைவீட்டாரிடம் கூட கேட்டு பாருங்கள், என் மகன் நன்றாக படிக்க கூடியவன். அவன் இரவு பகலாக லேப்டாப்பின் முன்னே அமர்ந்திருப்பான்.
அதில் அவன் என்ன செய்கிறான் என்பது எதுவும் எங்களுக்கு தெரியாது, ஆனால் இவர்கள் குற்றம் சாட்டும் எதையும் என் மகன் செய்திருக்க மாட்டான்" என்று கூறினார். இந்த வழக்கை விசாரிக்கும் டிசிபி மல்ஹோத்ரா, "இந்த ஆப்பை கிட்ஹப்பில் உருவாக்கியது நீரஜ் தான், @bullibai_ ட்விட்டர் ஐடியும் மற்ற சமூக வலைதள ஐடிக்களும் தன்னால்தான் உருவாக்கப்பட்டது என்று நீரஜே ஒத்துக்கொண்டுள்ளார்", என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்