ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா உச்சி மாநாட்டின் இரண்டாவது பதிப்பு நாளை (பிப்ரவரி 24) தொடங்குகிறது.


ஐடியாஸ் ஆஃப் இந்தியா:


2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், காலநிலை மாற்றம் தொடங்கி உலக அதிகார அரங்கில் இந்தியாவின் நிலை உள்பட பல்வேறு தலைப்புகளில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். 


ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2ஆவது மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், முன்னாள் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தர், பாடகர்கள் லக்கி அலி மற்றும் சுபா முத்கல், எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ் மற்றும் தேவ்தத் பட்டநாயக், நடிகைகள் சாரா அலி கான், ஜீனத் அமன், நடிகர்கள்  ஆயுஷ்மான் குரானா மற்றும் மனோஜ் வாஜ்பாய், பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, விளையாட்டு நட்சத்திரங்கள் ஜ்வாலா குப்தா மற்றும் வினேஷ் போகட் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.


'புதிய இந்தியா' எதனால் கட்டமைக்கப்பட்டுள்ளது, இப்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நமது நாடு, சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டான 2047ஆம் ஆண்டுக்குள் எப்படி வளர்ந்த நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.


என். ஆர். நாராயண மூர்த்தி:


இந்த ஆண்டின் உச்சிமாநாட்டிலும் இன்ஃபோசிஸ் நிறுவனர் என். ஆர். நாராயண மூர்த்தி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சிமாநாட்டில், சிறந்த எதிர்காலத்திற்காக ஐடி நிறுவனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தனது எண்ணங்களை அவர் பகிர்ந்து கொண்டார். "புதிய கார்ப்பரேட் கலாசாரம்: தலைவரின் வழிகாட்டி" என்ற தலைப்பில் அவர் விவாதிக்க உள்ளார்.


தற்போது உலகளவில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிசை நாராயண மூர்த்தி கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கினார். 2002ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தலைமை செயல் அதிகாரியாகவும், பின்னர் 2002 முதல் 2011 வரை தலைவராகவும் பணியாற்றினார். 2011இல் அந்த பதவி விலகிய பிறகும், 2013இல் தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டார். 2011இல் இன்ஃபோசிஸின் கெளரவ தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.


40 ஆண்டுகளுக்கு மேலான தொழில் வாழ்க்கையில் கார்ப்பரேட் இந்தியாவில் நடந்த பெரிய மாற்றங்களை தொழில் அதிபராக எதிர் கொண்டார். அவுட்சோர்சிங் துறையில் அவர் அளித்த மகத்தான பங்களிப்பின் காரணமாக, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களால் "இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை" என்று நாராயண மூர்த்தி அழைக்கப்படுகிறார். அவர் 2008 மற்றும் 2011 இல் முறையே பத்ம விபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார்.


வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர்களுக்கு கார்ப்பரேட் உலகின் சமீபத்திய போக்குகள் பற்றி நாராயண மூர்த்தி தன்னுடை கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளார். நாளை மறுநாள், அவரின் நுண்ணறிவு மிக்க உரையை abplive.com இல் கேட்கலாம்.