கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக ஐஏஎஸ் விதிகள் 1954 இல் ( IAS cadre Rules 1954 ) கொண்டுவரவுள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.  


மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை நடத்துகிறது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி என்ற அனைத்திந்திய  பணிகளும், இந்திய வெளியுறப் பணி (Foreign Service), வருவாய்ப் பணி (Revenue Service), அஞ்சல் பணி (Postal Service) போன்ற மத்தியப் பணிகளையும் நிரப்புகிறது. இதில், மத்தியப் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்த மாநில அரசுகளையும் சார்ந்திராமல், மத்திய அரசின் கீழ் உள்ள பல்வேறு பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.     


ஆனால், அனைந்திந்திய பணிகளான ஐஏஎஸ்,ஐபிஎஸ்,வனப்பணி அதிகாரிகள்  மாநில அரசின் கீழ் பணியாற்றுவார்கள். இருந்தாலும், 1954 வருட பணி விதிகளின் படி, மாநில அரசின் சம்மதத்தோடு இந்த அதிகாரிகளை மாற்றுப் பணிகளுக்கு (Deputation) மத்திய அரசு அழைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த  ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.அமுதா பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் (Deputation).


இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசு இந்த அதிகாரிகளை  மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக்கொள்ளலாம் என விதி-6 ல் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது, கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.    




இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், " ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய ஒன்றிய அரசு எப்போது வேண்டுமானாலும் இந்திய ஒன்றிய அரசுப்பணிக்கு அழைக்க வகை செய்யும் விதமாக பாஜக அரசு ஐஏஎஸ் விதிகள் 1954 இல் ( IAS cadre Rules 1954 ) கொண்டுவரவுள்ள திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதை கைவிடவேண்டும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்வது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். அதுமட்டுமின்றி எப்போது நம்மை டெல்லிக்கு மாற்றல் செய்வார்களோ என இந்த அதிகாரிகளை அச்சத்திலேயே வைத்திருப்பதாகவும் இருக்கும்.


ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சி அல்லாத வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளை சீர்குலைப்பதற்கும் இது கருவியாக அமைந்துவிடும். எனவே இந்த ஆபத்தான நடஷக்கையை உடனடியாகக் கைவிடுமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தது. 


முன்னதாக, இந்த சட்ட விதிகளை மாற்றம் செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு கடிதம் எழுதினார்.