கேரளத்தில் மோகினி ஆட்டக்கலைஞர் டாக்டர் நீனா பிரசாந்தின் நடனத்திற்குத் தடை விதித்ததாக நீதிபதி எதிராகப் போரட்டங்கள் வலுத்துள்ள நிலையில் அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


நடந்தது என்ன?


கேரளத்தில் பிறந்தவர் நீனா பிரசாத், அம்மாநில நடனக் கலையான மோகினி ஆட்டத்தில் தலைசிறந்து விளங்கும் நடன கலைஞர் ஆவார். இவரின் பாவனையை ரசிப்பதற்கே ரசிகர்கள் கூடும் அலைமோதும் என்று கூறலாம்.  சமீபத்தில் நீனா பிரசாத், ஸ்ரீசித்ரன் எம்.ஜே எழுதிய ‘இதிஹாசங்களே தேடி’ (வரலாற்றைத் தேடி) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, நடன நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டிருந்தார்.  பாலக்காட்டில் சக்யம் அதாவது நட்பு என்ற தலைப்பில் அர்ஜூனனுக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள நெருங்கிய பிணைப்பைப் பற்றி அரங்கேறும் நிகழ்வாக அது அமைய இருந்தது. 
இந்நிலையில், சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்நிகழ்ச்சி இடையூறாக உள்ளதாகவும், டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினி ஆட்டத்தை நிறுத்துவதற்கு மாவட்ட நீதிபதி கலாம் பாஷா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


இதனையடுத்து மாவட்ட நீதிபதியின் உத்தரவின் படி, நிகழ்ச்சியின் இசை சத்தமாக இருந்ததாகக் காவல்துறைக்கு புகார் வந்ததாக ஏற்பாட்டாளர்களால் டாக்டர் நீனா பிரசாத்துக்கு தெரிவிக்கப்பட்டதோடு மோகினி ஆட்ட நிகழ்ச்சி பாதியிலே நிறுத்தப்பட்டதாகவும் கூறபப்டுகிறது.


இது குறித்து நீனா பிரசாத் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "இது எனக்கு மட்டும் நேர்ந்த அவமானம் இல்லை. இந்திய கலாச்சார சகோதரத்துவத்திற்கும், கேரள கலாச்சாரத்திற்கும் அவமானம்.  இந்நிகழ்வால் என் கண்கள் கண்ணீரில் நிரம்பியது. என் இதயத்தில் ரத்தம் வழிந்தது" என்று தெரிவித்திருந்தார்.


வலுக்கும் எதிர்ப்பு.. டாக்டர் நீனா பிரசாத்தின் நடனத்திற்குத் தடை விதித்ததாக நீதிபதி எதிராகப் போராட்டங்கள் வலுத்துள்ளது. அவருக்கு எதிராக நீதிமன்ற வளாகங்களில் கூட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களிலும் அவருக்கு எதிரான கருத்துகள் வலுத்துள்ளன. இந்நிலையில் பாலக்காடு பார் அசோஷியன் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.




அதில் அவர் கூறியிருப்பதாவது:


போலீஸாரிடம் நிகழ்ச்சியை நிறுத்துமாறு நான் உத்தரவிடவில்லை. ஆனால் நிகழ்விடத்தில் சத்தம் அதிகமாக இருந்ததால் அந்த சத்தத்தின் அளவை மட்டும் குறைத்துக் கொள்ளுமாறு எனது ஊழியர் பாலக்காடு துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளார். நான் கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுக் கொண்டேன். ஆறு ஆண்டுகள் பரதமும் கற்றுக் கொண்டேன். நான் நிச்சயமாக கலைக்கு எதிரானவன் அல்ல. ஆனால் நிகழ்ச்சியை நான் நிறுத்தியதாகவும், மத ரீதியான காழ்ப்புணர்ச்சியால் அதனை நிறுத்தியதாகவும் வெளியாகும் தகவல்கள் அதிருப்தி அளிக்கின்றன.


மேலும் நீதிமன்ற வளாகத்தினுள் போராட்டங்களை முன்னெடுத்து மற்ற ஊழியர்களுக்கு தொந்தரவை உருவாக்குவது சரியானதல்ல. நீதிமன்ற வளாகங்களில் போராட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.