Nitish kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். இதன் மூலம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கடந்த 2022ம் ஆண்டு முதல், நடைபெற்று வந்த நிதிஷ்குமார் தலைமயிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம், இன்னும் சில மணி நேரங்களில் பாஜகவின் ஆதரவுடன், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டமன்றத்தின் பலம்:
பீகார் சட்டமன்றம் மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் தற்போதைய சூழலில், பாஜக 78 உறுப்பினர்களையும், ஐக்கிய ஜனதா தளம் 45 உறுப்பினர்களையும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 79 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19 உறுப்பினர்களையும், இடதுசாரி கட்சிகள் 16 உறுப்பினர்களையும், எஐஎம்ஐஎம் கட்சி 2 உறுப்பினர்களையும் கொண்டிருக்க, ஒருவர் சுயேச்சையாகவும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு, மொத்தமாக பெரும்பான்மைக்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால் இன்று மாலையே நிதிஷ்குமார் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியை கலைத்தது ஏன்?
ஆளுநரை சந்தித்த பிறகு நிதிஷ்குமார் ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். ஆட்சியை கலைக்கும்படியும் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டேன். அரசியல் சூழல் காரணமாகவே லாலு பிரசாத் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டேன். அனைவரது கருத்தையும் கேட்டு தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணி நல்ல நிலையில் இல்லை. நான் இவ்வளவு செய்தேன். நான் எதிர்க்கட்சி கூட்டணியை அமைத்தேன், ஆனால் யாரும் வேலை செய்யவில்லை. இது மக்களை தொந்தரவு செய்கிறது. பழைய கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். புதிய கூட்டணிய உருவாக்குவோம்” என நிதிஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.