Chirag Paswan: நான் காய்கறிகளில் இருக்கும் உப்பு போன்றவன். ஒவ்வொரு தொகுதியிலும் என்னால் 20,000 முதல் 25,000 வரை வாக்குகளை பிரிக்க முடியும் எனவே பாஜக இந்த முறை எங்களுக்கு நல்ல எண்ணிக்கையில் சீட் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி ( ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்
பீகார் சட்டமன்ற தேர்தல்:
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இச்சூழலில் தான் ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு மறைமுகமான ஒரு எச்சரிக்கையை விட்டிருக்கிறார் சிராக் பாஸ்வான். அதாவது பீகாரில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கிறது. இதில் இப்போதே பாஸ்வான் தங்கள் கட்சிக்கான பேரத்தை தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத லோக் ஜனசக்தி கட்சி ( lok janshakti party) 135 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு சிராக் பாஸ்வான் தலைமையில் மக்களவை தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட 5 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதன் மூலம் அவர்களது வாக்கு சதவீதமும் கணிசமாக உயர்ந்தது.
காய்கறிகளில் உப்பு போன்றவன்:
இந்த நிலையில் தான் இந்தாண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் லோக் ஜனசக்தி ( ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வன் 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக அவர் பேசியுள்ளார். அதில், “ நான் காய்கறிகளில் உப்பு போன்றவன். ஒவ்வொரு தொகுதிகளிலும் என்னால் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்குகளை பிரிக்க முடியும்.
எங்களுக்கு இந்த முறை நல்ல எண்ணிக்கையில் சீட் கிடக்க வேண்டும். என்னுடைய மனதில் ஒரு எண்ணிக்கை இருக்கிறது. அதன்படி சீட் கிடைக்க வேண்டும். ஆனால், எத்தனை சீட் வேண்டும் என்பதை நான் பொது வெளியில் சொல்ல விரும்பவில்லை. அதேபோல், பீகாரில் உள்ள எங்கள் கட்சி தொண்டர்கள் என்னை முதல்வராக்க வேண்டும் என்றும் விரும்பிகின்றனர்.
கூட்டணியில் இல்லை:
அதில் நாம் எந்த தவறும் சொல்ல முடியாது. எல்லா கட்சி தொண்டர்களுக்கும் அந்த ஆசை தான் இருக்கும் அதை நாம் தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் தலைவர்களுக்காக பெரிய கனவு காண்கிறார்கள். நான் பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இல்லை. நான் இங்குள்ள அரசை ஆதரிக்க மட்டுமே செய்கிறேன். மத்தியில் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறோம். நான் சங்கடமாக உணர்ந்தால் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை விட்டு வெளியேறுவேன்”என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பீகார் அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.