ஹைதராபாத்தில் மிர் ஆலம் நீர்த்தேக்கத்தின் அருகில்  அமைந்துள்ளது  தான் நேரு விலங்கியல் பூங்கா. சுமார் 380 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து வரும் இந்த இடத்திற்கு மிருகக்காட்சி சாலை என்ற பெயரும் உள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடமாகவும் இந்த இடம் இருந்து வருகிறது. அனைவராலும் மிகவும் அறியப்பட்ட இவ்விடம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.


ஆம், இந்த நேரு விலங்கியல் பூங்காவில் காட்டெருமை ஒன்றிற்கு கடந்த ஜூன் 2-ஆம் தேதி கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்திய காட்டெருமை வகையினை சார்ந்த இந்த இனக்கன்றுக்குட்டி அதிக வலிமை பெற்றதாக இருப்பது வழக்கம். மேலும் தெலுங்கானா உருவான நாளில் பிறந்தமையின் அடிப்படையிலும் தான் தெலுங்கானாவின் தலைமை வனக்காவலர் சோபா IFS  கன்றுக்கு பழங்குடியினத் தலைவரின் பெயரான  கொமரம் பீம் என்று பெயர் சூட்டியுள்ளார்.




யார் இந்த கொமரம் பீம்?  இந்த பெயரினை வைத்ததிலிருந்து தெலுங்கானா மாநிலம் முழுவதும் சர்ச்சை மற்றும் போராட்டங்கள் ஏன் ஏற்பட்டுள்ளது? கொமரம் பீம் என்பவர் அப்போதைய ஆளும் ஹைதராபாத் நிசாமின் அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா போரின்போது பேராட்டம் நடத்தியுள்ளார். மேலும் ஐதராபாத்தின் விடுதலைக்காகவும், ஆசாப் ஜாமி வம்சத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பழங்குடியினத் தலைவராகவும் இருந்தவர்தான் இவர். இத்தகைய ஆளுமையுடன் விளங்கிய இவரின் பெயரினை விலங்கியல் பூங்காவில் பிறந்த கன்றுக்குட்டிக்கு வைத்ததுதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.


மேலும் கொமரம் பீம்மின் குடும்பத்தினர் இப்பெயரினை வைத்தமைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்ததோடு, எங்களுடைய மனதினை மிகவும் கஷ்டப்படுத்தும் வகையில் இச்செயல் அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.  இதோடு பழங்குடியின தலைவரின் ஆதரவாளர்களும் கன்றுக்கு தலைவரின் பெயர் சூட்டியது  என்பது அவருக்கு எதிரான  நடவடிக்கை என தெரிவித்து மாநிலங்கள் முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு வந்தனர். இதனையடுத்து தான் கொமரம் பீம் என்ற பெயரினை மாற்றி வைப்பதாக நேரு விலங்கியல் பூங்காவின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை இதற்கான மாற்று பெயரினை வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் விலங்கியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.