ஆன்லைனில் ஆண்களிடம் பெண்ணைப்போல் நடித்து வீடியோ ரெக்கார்ட் செய்து ப்ளாக்மையில் செய்து வந்த  நபரை ஹைதரபாத் சைபர்  கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 


தொழில்நுட்பம் வளர வளர மனிதர்கள் நூதனமான முறையில் ஏமாற்ற தொடங்கிவிட்டார்கள், மேலும், ஏமாறவும் தொடங்கிவிட்டார்கள். சுமார் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னதாக, ஒரு ஆண் மொபைல் போனில் பேசினால் எதிரில் உள்ளவர்களுக்கு ஒரு பெண்ணின் குரலாக கேட்கும். ஆனால், இன்றைய அதிநவீன தொழில்நுட்ப காலத்தில் வீடியோ கால் சேட்டிங் என்பது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஸ்மார்ட் போன் இல்லாத நபரே கிடையாது என்ற காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். அதனால் நூதனமான முறையில் மக்கள் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அரசும் எவ்வளவு தான் பல்வேறு வகையான எச்சரிக்கைகளை மக்களுக்கு ஏற்படுத்தினாலும், தொடர்ந்து ஏமார்ந்து பணத்தை, பொருளை, உயிரைவிடுபவர்களும் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 


இப்படியான ஒரு சம்பவம் தான், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.  ஆண் ஒருவர் சமூக வலைதளத்தில், பெண்ணைப்போல புரொபைல் ஓபன் செய்துள்ளார். பின்னர் அவரே பல்வேறு வகையான ஆண்களின் பதிவுகளுக்கு லைக் போட்டு அவர்களின் கவனத்தினை தனது பக்கம் ஈர்த்துள்ளார். பின்னர், அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக ஆசை வார்த்தைகளை பேசி அவர்களை மயக்கியுள்ளார். பின்னர் அவர்களிடம் வீடியோ காலில் பேசத் தொடங்கி, பெண்ணைபோலவே நடித்து ஆண்களை தனது வலையில் விழவைத்துள்ளார். இவரை பெண் எந்ன நம்பி காதல் வலையில் விழுந்த ஆண்கள் பலர், இவருடன் வீடியோ காலில் இஷ்டம்போல பேசியுள்ளனர். இதனை பதிவு செய்து வைத்த அந்த நபர், வீடியோ காலில் அவர்கள் பேசியதை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் நடந்து வர பாதிக்கப்பட்ட ஒருவர், புகார் அளித்ததின் பேரில் ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


இதில் போலீசாரின் விசாரணையில் 31 வயது மதிப்புள்ள குச்சிகுள்ளா சாய் கிருஷ்ணா ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களையும் சேகரித்து, தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவரை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 417, 419, 420, 385 மற்றும் சைபர் கிரைம் ஐடி சட்டத்தின் பிரிவுகள் 66 (சி&டி) கீழ் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவரும் சமூக வலைதளத்தி பெண்ணாக நடித்த ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு, பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தான் தான் ஏமாற்ற்ப்பட்டதை ஒரு முக்கியமான ப்ளானாக திட்டம் தீட்டி மற்றவர்களை ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணைக்குப்ப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.