கொரோனா பெருந்தொற்று காரணமாக எழுந்த அச்சத்தால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டன. எனினும் சில மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அம்மாநில மக்களின் வாழ்வுக்குப் பெரும் உதவிகரமான ஒன்றாக இருப்பதால், புதுச்சேரி, கோவா முதலான மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப் பெரியளவிலான தடைகள் விதிக்கப்படவில்லை.
கொரோனா பெருந்தொற்றையும் பொருட்படுத்தாமல் கோவா மாநிலத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மக்கள் பெரும் திரளாக ஈடுபட்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் கோவாவில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்களுக்காக கடற்கரை நகரமான கோவாவில் பயணிகள் குவிந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 2 அன்று எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படி, கோவிட் தொற்றின் பாசிட்டிவ் விகிதம் சுமார் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு அங்கு திரண்ட பெருமளவிலான சுற்றுலா பயணிகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
`கொரோனாவின் புதிய அலைக்கான கம்பீர வரவேற்பு இது. பெரும்பாலும் சுற்றுலா பயணிகளே!’ என்று இந்த வீடியோவை வெளியிட்ட ஹெர்மான் என்பவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கோவாவில் உள்ள பாகா கடற்கரைக்கு அருகில் உள்ள சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் நடந்து செல்வதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. கோவா மாநில சுகாதாரத்துறையின் முடிவுகளின் படி, கடந்த 24 மணி நேரங்களில் சுமார் 388 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவாவில் இதுவரை மொத்தமாக சுமார் 1.81 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களுள் சுமார் 3523 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரி 2 அன்று, கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்போதைய புதிய கொரோனா திரிபு வைரஸான ஒமிக்ரானை எதிர்கொள்வதற்காக கோவா மாநில அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்திய பிறகும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக கோவாவின் கடற்கரைகள், மதுபானக் கூடங்கள், இரவு நேர கிளப்கள் ஆகியவற்றில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் பெருமளவில் குழுமியுள்ளனர்.
ஹோட்டல்கள், டெஸ்டாரண்ட்கள், கேசினோக்கள் ஆகியவற்றில் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பவர்களும், கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு விதிமுறை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.