யூடியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று சமீபத்தில் உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்ததா? அல்லது எஸ்.எம்.எஸ். வந்ததா? அப்படி வந்திருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இப்படிப்பட்ட மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 


ஏனெனில், இது ஒரு பெரிய மோசடியாகும். எளிதில் பணம் ஈட்ட முடியும் என ஆசைவார்த்தை கூறி மக்கள் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்படுகிறார்கள். இது, தொடர் கதையாகி வருகிறது. இம்மாதிரியாக பலர் ஏமாற்றப்பட்ட சூழலில், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆன்லைன் மோசடி குறித்து தெரிந்து கொண்டு, இதில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வது எப்படி என்பதை கீழே காணலாம்.


மோசடியாளர்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள்? 


பயனர்களின் (மக்களின்) வாட்ஸ் அப், டெலிகிராம் கணக்குகளை யாருக்கும் தெரியாமல் கண்காணிக்கும் மோசடியாளர்கள், இம்மாதிரியான ஆன்லைன் மோசடியில் ஈடுபடுகின்றனர். யூடியூப்பில் சில வீடியோக்களை லைக் செய்யும்படி, தெரியாத எண்ணிலிருந்து பயனர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் மோசடி நடவடிக்கை தொடங்கப்படுகிறது.


'லைக்' ஒன்றிற்கு 50 ரூபாய் அளிப்பதாக மோசடியாளர்கள் ஆசைவார்த்தை கூறுகின்றனர். இந்த வீடியோக்கள் பெரும்பாலும் Gucci, Chanel போன்ற உலகளாவிய பிராண்டுகளின் வணிக விளம்பரங்களாகும். இந்த வீடியோக்களை லைக் செய்து, அதன் ஸ்கிரீன்ஷாட்களை வாட்ஸ்அப்பில் பகிருமாறு பயனர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.


இப்போது, ​​பயனர்கள் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்தவுடன், அவர்களுக்கு உடனடியாக வாக்குறுதியளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும். எனவே, ஒரு வீடியோவை 'லைக்' செய்தால், 50 ரூபாய் கிடைக்கும். எத்தனை லைக் விழுகிறதோ அதை பொருத்து மோசடியாளர்களும் பணம் அளிக்கின்றனர்.


லட்சக்கணக்கில் மோசடி:


நொய்டாவில் வசிக்கும் 42 வயது பெண் ஒருவரிடம், அதிக பணம் தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றியுள்ளது மோசடி கும்பல். ஆரம்பத்தில் பயனர்களை கவர முதல் முறை பணம் அளிக்கப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்து பணம் தராமல் ஏமாற்றப்படுகின்றனர்.


ABP நாடு நிறுவனத்தில் உள்ள ஒருவருக்கும் இப்படிப்பட்ட மெசேஜ் ஒன்று வந்துள்ளது. ​​மோசடி உண்மையில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பார்க்க, நாங்கள் அந்த மெசேஜ்-க்கு பதில் அளிக்க முடிவு செய்தோம். குறிப்பிட்ட அந்த மெசேஜ், +7 என தொடங்கும் தொடர்பு எண்ணில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. ரஷியாவில் இருக்கும் தொடர்பு எண்கள் மட்டுமே 7லிருந்து தொடங்கப்பட வேண்டும்.


ABP நாடு நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு நபருக்கும் இதேபோன்று ஒரு மெசேஜ் வந்துள்ளது. ஆனால், இந்த முறை, +1 என தொடங்கும் தொடர்பு எண்ணில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் எண்கள் மட்டும் +1 என தொடங்கும். 


ப்ளாக் செய்ய வேண்டும்:


இரண்டு முறையும், "Can I have a minute of your time?" என்று மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. தெரியாத எண்ணில் இருந்து இப்படிப்பட்ட மெசேஜ் வந்தால், உடனடியாக பிளாக் செய்ய வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். முடிந்தால், உள்ளூர் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவை அணுகி புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.