குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின நபர் ஒருவர், நல்ல சட்டைகள் மற்றும் சன்கிளாஸ்களை அணிந்ததற்காக மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் அவரை அணுகி தாக்கியதாகவும், பின்னர் அனைவரும் வந்து கொஞ்ச நாளாகவே ஓவராகதான் போகிறாய் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
நல்ல ஆடைகள் அணிந்ததால் கோபம்
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள, பாலன்பூர் தாலுகாவில் உள்ள மோட்டா கிராமத்தில் செவ்வாய்கிழமை இரவு, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், அந்த நபர் நல்ல ஆடைகள் மற்றும் சன்கிளாஸ்களை அணிந்ததற்காக அவர் மீது கோபமடைந்ததால் தாக்கியதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரும் அவர்களால் தாக்கப்பட்ட அவரது தாயும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
ஓவராக போகிறாய் எனக் கூறி கொலை மிரட்டல்
கண்ணாடி அணிந்ததற்காக கோபம் அடைந்து தன்னையும் தனது தாயையும் தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஜிகர் ஷெகாலியா அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் அவரை அணுகியதாக புகார் கூறப்பட்டது. அவர் ஜிகர் ஷெகாலியாவை தாக்கியுள்ளார். அதோடு அவர் "கொஞ்ச நாளாகவே ஓவராகதான் போகிறாய்" என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
தாயின் உடையும் கிழிப்பு
அதே இரவில், புகாரளித்த ஜிகர் ஷெகாலியா ஒரு கிராமக் கோயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, ராஜபுத்திர குடும்பப்பெயர் கொண்ட சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் அவரை நோக்கி வந்துள்ளனர். தடிகள், கம்புகள் போன்ற ஆயுதம் ஏந்திய அவர்கள் நேராக வந்து, ஏன் நல்ல ஆடை அணிந்து கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறாய் என்று கேட்டு, அவரை தாக்கி பால் கடையில் பின்னால் இழுத்துச் சென்றுள்ளனர். அவரை காப்பாற்ற அவரது தாய் விரைந்து சென்றபோது, அவர்கள் அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதோடு மேலும் கொடூரமாக, அவர்கள் அவரது தாயின் ஆடைகளையும் கிழித்துள்ளனர் என்று புகாரை மேற்கோள்காட்டி போலீசார் தெரிவித்தனர்.
வழக்குப் பதிவு
குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கும் எதிரான எஃப்ஐஆர் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின் கீழ், கலவரம், சட்டவிரோத கூட்டம், பெண்ணின் அடக்கத்தை சீர்குலைத்தல், தானாக முன்வந்து காயப்படுத்துதல், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.