கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுப்பதாகக் கூறி, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலகளவில் பெரும் பிரச்னையை உருவாக்கியுள்ளது.


குறிப்பாக, காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்த வாரம், காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. இந்த தாக்குதலில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.


இஸ்ரேலுக்கான இந்திய தூதருடன் கங்கனா:


இந்நிலையில், இஸ்ரேலுக்கான இந்திய தூதர் நோர் கிலோனனை (Naor Gilon)  நடிகை கங்கனா ரனாவத் இன்று டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அங்கு, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நிலவும் நெருக்கடி குறித்து பேசினார். மேலும், வரவிருக்கும் தனது படமான தேஜஸ் பற்றியும் குறிப்பிட்டார். இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினக்கு ஏற்பட்ட மோதல் பற்றி பேசிய அவர், இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன் என்றார். இஸ்ரேலுக்கான இந்திய தூதருடன் சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.






அதில், "இன்று உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவும், இஸ்ரேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றன. நேற்று ராவண வதத்திற்காக டெல்லி சென்றபோது, இஸ்ரேல் தூதரகத்திற்கு சென்று இன்றைய நவீன ராவணனையும், ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளையும் தோற்கடிக்கும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். இஸ்ரேல், ஹமாஸ் போரில் சிறு குழந்தைகளும், பெண்களும் குறிவைக்கப்படுவது மனதை உலுக்குகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.


இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்தியாவின் தூதர் நோர் கிலோன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வந்திருந்த நடிகை கங்கனா டெல்லியில் உள்ள தூதரகத்துக்கு வந்து சந்தித்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான  போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரித்துள்ள கங்கனா மட்டுமல்லாமல், பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய நண்பர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.