படிப்பறிவு இல்லாத மக்கள் இந்தியாவுக்கு சுமையாக இருந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி இருக்கிறார்.


பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பதவி ஏற்று 20 ஆண்டுகள் கழிந்துள்ளது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர் மோடியின் நண்பரும், பாஜக முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசினார். அப்போது அவர், நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கு பெரும் பங்கு ஆற்றி வருவதாக குறிப்பிட்டார். இது குறித்து நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் எந்த அளவு பங்காற்றி வருகிறோம் என்பது புரியும் எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அமித்ஷா, “இந்தியாவில் படிப்பு அறிவு இல்லாத மக்கள் நாட்டுக்கு பெரும் சுமையாக இருந்து வருகின்றனர். அவருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமை குறித்து கூட அறிவு இருப்பது இல்லை. அவரிடம் இருந்து நாடு எதிர்பார்க்கும் கடமைகளை அவர் அறிந்து வைத்திருப்பது கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரால் எப்படி நாட்டில் ஒரு நல்ல குடிமகனாக  இருக்க முடியும்.?” என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.



பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக முதல் முறை பதவியேற்கும் போது மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இடை நிற்றல் இருந்து வந்ததாக அமித்ஷா நினைவுகூர்ந்தார். “பிரதமர் மோடி குஜராத்தில் அப்போது மாணவர் சேர்க்கையை திருவிழாவை போல நடத்திக் காட்டினார். 100% ஆக மாணவர் சேர்க்கையை மோடி உயர்த்தினார். பெற்றோர்களுக்கான கமிட்டியை அமைத்தார். மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் அவர்களை அழைத்து வருவது ஆசிரியர்களின் கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் 37 சதவீதமாக இருந்த இடைநிற்றலை மோடி 1% ஆக குறைத்தார்.” எனப் பேசினார்.


பிரதமர் நரேந்திர மோடியை ஒரு ஜனநாயகத் தலைவர் என புகழாரம் சூட்டிய அமித்ஷா, தற்போதைய மோடி ஆட்சி காலத்தில் இருப்பதை போல், வேறு எந்த ஆட்சி காலத்திலும் மத்திய அமைச்சரவை ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்பதை அவரது விமர்சகர்களே ஒப்புக்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எதேச்சதிகாரம் மிக்க தலைவர் என்ற விமர்சனத்தை ஏற்க மறுத்த அமித்ஷா, அனைத்து விதமான நல்ல ஆலோசனைகளையும் செவி தாழ்த்தி கேட்கக்கூடியவர் என புகழ்ந்தார்.


“பிரதமர் மோடி எந்த துணிச்சலான நடவடிக்கையையும் எடுக்க தயங்கியது இல்லை. கருப்புப் பணத்தை மீட்கவும், பொருளாதாரத்தை சீர்திருத்தவும், வரி செலுத்தும் முறையில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளால் எங்களுக்கு வாக்களித்தவர்கள் கூட பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அனைத்தையும் நாட்டின் நலன் கருதி பிரதமர் செய்கிறார் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்து உள்ளார்.