மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) முதலாவது அனைத்து மகளிர் படைப்பிரிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பெண்கள் மட்டுமே இருக்கும் சிஐஎஸ்எப் படைப்பிரிவு:
மத்திய தொழில் பாதுகாப்புப் படை என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுதமேந்திய காவல் பிரிவாகும். அரசு அல்லது தனியார் பெரிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
குறிப்பாக, விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சிஐஎஸ்எப் பிரிவே பாதுகாப்பு வழங்கி வருகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு, சிஐஎஸ்எப் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், பெண்கள் மட்டுமே இருக்கும் சிஐஎஸ்எப்பின் முதலாவது அனைத்து மகளிர் படைப் பிரிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், "தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்கை நனவாக்குவதற்கான உறுதியான நடவடிக்கையில், சிஐஎஸ்எப்பின் முதல் அனைத்து மகளிர் படைப்பிரிவை நிறுவ மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
"பிரதமரின் கனவு"
விமான நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் போன்ற நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும், கமாண்டோக்களாக விஐபி பாதுகாப்பை வழங்கும் பொறுப்பையும் மகளிர் பட்டாலியன் ஏற்கும். தேசத்தைப் பாதுகாக்கும் முக்கியமான பணியில் அதிகமான பெண்கள் பங்கேற்க வேண்டும் என்ற அபிலாஷைகளை இந்த முடிவு நிச்சயமாக நிறைவேற்றும்" என பதிவிட்டுள்ளார்.
மத்திய ஆயுத போலீஸ் படையில் தேசத்திற்கு சேவை செய்ய விரும்பும் பெண்களுக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை விருப்பமான தேர்வாக உள்ளது. சிஐஎஸ்எப்-பில் பெண்களின் எண்ணிக்கை தற்போது 7% க்கும் அதிகமாக உள்ளது.
ஒரு மகளிர் பட்டாலியனைச் சேர்ப்பது, நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பெண்களை இதில் சேர்ந்து தேசத்திற்கு சேவை செய்ய ஊக்குவிக்கும். இது சிஐஎஸ்எப்-பில் பெண்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளிக்கும்.
புதிய படைப்பிரிவின் தலைமையகங்களுக்கான இடத்தை முன்கூட்டியே ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் தேர்வு செய்வதற்கான தயாரிப்புகளை சிஐஎஸ்எப் தலைமையகம் தொடங்கியுள்ளது. முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, விமான நிலையங்களின் பாதுகாப்பு, டெல்லி மெட்ரோ ரயில் பணிகள் ஆகியவற்றில் கமாண்டோக்களாக பன்முகப் பங்காற்றும் திறன் கொண்ட ஒரு தலைசிறந்த படைப்பிரிவை உருவாக்கும் வகையில் இந்தப் பயிற்சி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
53-வது சிஐஎஸ்எப் தின விழாவை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் பேரில் சிஐஎஸ்எப்-பில் அனைத்து மகளிர் பட்டாலியன்களை உருவாக்குவதற்கான திட்டம் தொடங்கப்பட்டது.