ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்சியுடன் வந்து வாக்களித்துள்ளார்.


ஜனநாயக கடமையாற்றிய தோனி: 


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் இந்தியா பிளாக் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.


ஆட்சியை தக்க வைக்க இந்தியா கூட்டணியும் ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. காலை 7 மணியில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி 59.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


இந்த நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்சியுடன் வந்து வாக்களித்துள்ளார். 


 






சட்டமன்ற தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றும் தோனி, மற்ற பிரபலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். கடந்த மக்களவை தேர்தலிலும் சரி, 2019ஆம் ஆண்டு நடந்த முந்தைய சட்டமன்ற தேர்தலிலும் சரி, தோனி வாக்களித்திருந்தார்.  


ஜார்க்கண்ட் தேர்தல்:


முதற்கட்ட வாக்குப்பதிவான இன்று 43 தொகுதிகளில் 609 ஆண்கள், 73 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தக் கட்டத்தில் 6 அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்டோரும் அடங்குவர். 


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 2.60 கோடி வாக்காளர்களில் 1.37 கோடி பேர் முதல் கட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக கிராமப்புறங்களில் 12,716, நகர்ப்புறங்களில் 2,628 என மொத்தம் 15,344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


இதையும் படிக்க: சிவ பக்தர்களே! "குழந்தை வரம் முதல் மன நிம்மதி வரை" ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இத்தனை நன்மையா?