இடதுசாரி தீவிரவாதம் நாட்டுக்கு பெரும் சவால் விடுத்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. குறிப்பாக, நக்சல் தீவிரவாதத்தால் வளர்ச்சி பணிகள் தடைப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன.


இடது தீவிரவாதத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்கள்:


இந்த நிலையில், இடது தீவிரவாதத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிலான ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள், ஒடிசா, பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "இடதுசாரி தீவிரவாதம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2022ஆம் ஆண்டுதான், நக்சல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இறப்புகள் பதிவாகியுள்ளது.


"நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு"


நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார். இதை தொடர்ந்து பேசிய அதிகாரிகள், "நக்சல் பாதித்த மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் 2010ஆம் ஆண்டை விட 2022இல் 77 சதவிகிதம் குறைந்துள்ளது.


கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் இடது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு பகுதிகளில், பாதுகாப்பு நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இடது தீவிரவாத்தை எதிர்கொள்ள கடந்த 2015ஆம் ஆண்டு, தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், வளர்ச்சிக்கான தலையீடுகள், உள்ளூர் சமூக மக்களின் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக பல்முனை உத்தியை வகுக்க இந்தக் கொள்கை உதவுகிறது. இந்தக் கொள்கையின் உறுதியான அமலாக்கம் நாடு முழுவதும் இடது தீவிரவாத வன்முறையில் தொடர்ந்து சரிவை ஏற்படுத்தியது.


இடது தீவிரவாத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது 2010ஆம் ஆண்டை காட்டிலும் 2022ஆம் ஆண்டு 90 சதவிகிதம் குறைந்துள்ளது" என்றார்கள்.


மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, "2004க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் 17,679 இடது தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 6,984 இறப்புகள் பதிவாகியுள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: PAK vs NED WC 2023: சொதப்பிய டாப் ஆர்டர்; மிரட்டி விட்ட மிடில் ஆர்டர்; நெதர்லாந்துக்கு எதிராக 286 ரன்கள் குவித்த பாகிஸ்தான்