பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை வழக்கில், ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த பரசுராம் வாக்மரே மற்றும் மனோஹர் யாதவ் ஆகிய இருவருக்கும், ஸ்ரீராம் சேனா உட்பட இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.


கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, ‘லங்கேஷ் பத்ரிகே’ நாளிதழின் ஆசிரியரான கெளரி லங்கேஷ், பெங்களூருவில் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் வெளியே இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு, அதில் 8 பேருக்கு பிணை கிடைத்திருந்தது.


இந்த நிலையில், கடந்த ஒன்பதாம் தேதி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய மேலும் எட்டு நபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. இந்த எட்டு நபர்களில், சிறையில் இருந்து வெளிவந்த பரசுராம் வாக்மரே மற்றும் மனோகர் யாதவ் என்ற இருவருக்கு, ’ஸ்ரீ ராம சேனா’ உள்ளிட்ட இந்துத்வ அமைப்பினர் மாலையிட்டு வரவேற்பளித்தனர்.






மேலும், காளிகா என்னும் காளி கோவில் ஒன்றில் இருவரும் வழிபாடு நடத்தி தேவி சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். பின்னர் அருகிலுள்ள சத்ரபதி சிவாஜி மன்னர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்துள்ளனர். இதுதொடர்பான காணொளி வெளியாகி, அவை இணையத்தில் சுற்றலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்துத்வ அமைப்பினர் சார்பாக அவர்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, கோஷங்கள் எழுப்பி மரியாதை செய்யப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது


நாடறிந்த புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்திருக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.