Shocking Video: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில் இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொல்லுவதாக ஆசிரியர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  


சமீப காலமாகவே, கும்பல் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய - இந்து மக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைக்கும் வகையில் பல்வேறு விதமான வன்முறை சம்பவங்களில் அடிப்படைவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகதான், உத்தர பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


உ.பி.யில் அதிர்ச்சி:


உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்  தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கல்வித்துறை மோசமானதாக இருக்கும் நிலையில், இதனை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் தான் அங்கு ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. முசாபர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் திருப்தா தியாகி என்பவர் அங்குள்ள இந்து மாணவர்களிடம், இஸ்லாமிய மாணவரை அடிக்கச் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 






அந்த வீடியோவில், வகுப்பறையில் நின்றுகொண்டிருந்த இஸ்லாமிய மாணவரை, இந்து மாணவர் ஒருவர் அடிக்கும்படி ஆசிரியர் கூறுகிறார். அதனை தொடர்ந்து, முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அதன்பின், ஆசிரியர் கூறியபடி  பிற மாணவர்களும் வந்து அந்த இஸ்லாமிய மாணவரை தாக்கியது போன்று வெளியான வீடியோவில் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக குழந்தைகள் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 


இதுகுறித்து  பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கூறுகையில், "நான் என் குழந்தையை மீண்டும் அந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். பள்ளி கட்டணத்தை நிர்வாக திருப்பித் தருவதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி புகாரும் அளிக்க மாட்டேன். ஆசிரியர், குழந்தைகளுக்கு இடையே பகையை உருவாக்கியுள்ளார்” என்றார்.  மேலும், இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில், ”அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனிதமான இடத்தை வெறுப்பாக மாற்றுகின்றனர். இதேயே தான் பாஜகவும் செய்து வருகிறது. இந்தியா தீயில் எரிகிறது. குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள், நாம் அனைவரும் ஒன்றாக அன்பாக இருந்து அவர்களை நல்லதை கற்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.