Hindi version of MBBS: நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவ படிப்புகளை ஹிந்தியில் கற்பிக்க, ஹிந்திக்கு மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தங்களை மத்திய உள்துறை அமித் ஷா மத்திய பிரதேசத்தில் வெளியிட்டார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியே மத்திய பிரதேசத்திலும் ஆட்சியில் உள்ளது. அங்கு பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் படி மருத்துவ படிப்புகளை ஹிந்தியில் படிக்க ஏதுவாக, மருத்துவக் கல்வி பாடப்புத்தகங்களை ஹிந்தி மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்து இன்று (அக்டோபர் 16) போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹிந்திக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட புத்தகங்களை வெளியிட்டார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, மத்திய பிரதேச அரசானது, புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி மருத்துவ படிப்புகளை அவரவர் தாய் மொழியில் படிக்க ஏதுவாக, ஹிந்திக்கு மொழிபெயர்த்துள்ளது. கடந்த 232 நாட்களாக 97 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு மிகவும் சிறப்பாக செயல்பட்டு மொழி பெயர்த்துள்ளது. அந்த குழுவிற்கு பாராட்டுகள். மேலும், மத்திய பிரதேச அரசு நாட்டிலேயே முதல் முறையாக தாய் மொழியில் மருத்துவ படிப்புகளை படிக்க ஹிந்தியில் மருத்துவ பாடப்புத்தகங்களை மொழிபெயர்த்து உள்ளது. இது பாராட்டுகுரியது. மேலும் நாட்டின் பிரதமர் மோடியின் பல நாள் கனவான தாய் மொழியில் கற்றல் எனும் கனவை மத்திய பிரதேச சிவராஜ் சிங் சவுகான் அரசு நிறைவேற்றியுள்ளது" என்று கூறினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் சராங் கூறுகையில், மத்திய பிரதேச அரசு செய்துள்ள இந்த ஹிந்தி வழியில் மருத்துவக் கல்வி என்பது ஹிந்தி வழியில் கற்கும் முறையில் பெரும் மாற்றத்தினையும், புதிய மைல் கல்லாகவும் இருக்கும் எனவும் கூறினார். மேற்கொண்டு அவர் கூறுகையில், இது மருத்துவ கல்வித் துறையில் மிகப் பெரிய நாள். அதேபோல், இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஹிந்தி வழி மருத்துவ பாடப்புத்தகங்கள் என்பது மிகப்பெரிய சாதனை. இன்று வெளியிடப்பட்டுள்ள முதலாம் ஆண்டுக்கான மூன்று புத்தகங்களான அனாடமி, பிசியாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி ஆகிய புத்தகங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. பாரதிய ஜனதா அரசு தற்போது நிறைவேற்றி பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான பாடங்கள் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலேயே 13 மொழிகளில் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் அவரவர் தாய் மொழியில் மருத்துவ கல்வி என மத்திய அரசு கூறுவது ஏற்புடையதாக இல்லை என எதிர் கட்சி வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றனர்.