மத்திய அரசு இன்று ‘இந்தி தினத்தை’ அனுசரிக்கிறது. இதையொட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்தி தினக் கொண்டாட்ட நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், ’இந்திக்கு எந்த மாநில மொழியுடனும் முரண்பாடு இல்லை. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியான இந்தி மற்ற அனைத்து மாநில மொழிகளுக்கும் நண்பன். இந்த மொழிகளின் வளர்ச்சியை ஒருவருக்கொருவர் பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மட்டுமே எட்ட முடியும்.
இந்த நாளில், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி மற்றும் பிராந்திய மொழிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
மொழிப்போரில் இந்தியா தோல்வியடையும் என்ற ஒரு சூழல் நாட்டில் உருவானது. ஆனால் இந்தியா தலைவணங்காது. அதன் அதிகாரப்பூர்வ மொழியையும் பிராந்திய மொழிகளையும் பல நூற்றாண்டுகள் இந்த நாடு போற்றும்.
ஒவ்வொரு மாநிலத்தின் வரலாற்றையும் அதன் அதிகாரப்பூர்வ மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட வேண்டும், இதனால் ஒரு மாநிலம் மட்டுமல்ல, முழு நாடும் இந்த வரலாற்றைப் படிக்க முடியும்.
அதனால்தான் அறிஞர் தாகூர் கூட இந்தியாவின் பண்பாடு தாமரை போன்றது, அதன் ஒவ்வொரு இதழும் அதிகாரப்பூர்வ மற்றும் பிராந்திய மொழிகளைக் குறிக்கும் என்று கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு நமது தாய் மொழியும் ஆட்சி மொழியும் தடையாக இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு, தாய் மொழியை விட சிறந்த அறிவை வெளிப்படுத்தும் ஊடகம் வேறு கிடையாது என்பதை நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
நாட்டின் பிரதமர்கள் இந்தி பேசுவதில் தயக்கம் காட்டும் காலங்கள் பறந்தோடிவிட்டன. நமது பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச மன்றங்களில் இந்தியில்தான் பேசுகிறார்.
மொழியை வைத்து ஒருமனிதரை மதிப்பிடக் கூடாது.அது ஒரு வெளிப்பாட்டு ஊடகம் மட்டுமே. எந்த ஒரு நபரின் மதிப்பீடும் அவரது எண்ணங்கள், செயல்கள், புத்திசாலித்தனம், விடாமுயற்சி மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில்தான் இருக்கவேண்டும்.
இந்தியாவின் பண்பாடு மற்றும் அதன் பெருமையை எந்த வெளிமொழியும் நமக்கு அறிமுகப்படுத்த முடியாது. தாய்மொழியால் மட்டுமே குழந்தையை அதன் வேர்களுடன் இணைக்க முடியும்.
ஒரு குழந்தைக்கு அதனுடைய தாய்மொழியின் அனுபவத்தை இழக்கும் நாளில், அதன் வேர்களில் இருந்து துண்டிக்கப்படுகிறது’ எனப் பேசியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பான இந்தி தினத்தில் இந்தி மொழியின் முக்கியத்துவம் பற்றி அமித்ஷா ட்வீட் செய்தது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
'பாரதம் பல்வேறு மொழிகளைக் கொண்ட தேசம். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இருந்தும் மொத்த தேச மக்களுக்குமாக ஒற்றை மொழி என்பது அவசியமானதாக இருக்கிறது.இன்று தேசத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான வாயிலுக்கு அருகாமையில் இருக்கும் போது அதனை ஒற்றை மொழியால் மட்டுமே செய்ய முடியும், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே சாத்தியம்' என அவர் ட்வீட் செய்திருந்தார்.