பொதுவாக, சின்ன மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், இந்த முறை அங்கு நடந்த முடிந்துள்ள தேர்தல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


ஆம், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக அங்கு மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள், குஜராத் மற்றும் இடை தேர்தல்களுக்கு சேர்த்து தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.


அதில், 39 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 26 இடங்களிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இது நிம்மதியை அளித்துள்ளது.


இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால், பெரும்பான்மை தேவைப்படும் தொகுதிகளை காட்டிலும் கூடுதலாக 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஆரம்பத்தில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய போதிலும், ஒரு கட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக சூழல் மாறியது. தற்போது, அதுவே தொடர்ந்து வருகிறது.


இமாச்சலை பொறுத்தவரை, 1985க்கு பிறகு, பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் 5 முறை இமாச்சலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவருமான வீரபத்ர சிங் மறைவின் காரணமாக, அந்த போக்கு மாறும் என கூறப்பட்டது.


அதற்கு ஏற்றார்போல, இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகளுக்கான கருத்து கணிப்பு வெளியாகி இருந்தது. ஏபிபி நியூஸ்- சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 33 முதல் 41 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி 24 முதல் 32 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது.


ஆனால், கருத்துகணிப்புகளை பொய்யாக்கும் விதமாக இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டு கால இமாச்சல பிரதேச அரசியலை பாஜகவின் பிரேம் குமார் துமாலும், காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங்கும் ஆதிக்கம் செலுத்து வந்தனர். 


இரண்டு மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபத்ர சிங், கடந்த 2021ஆம் ஆண்டு காலமானார். அவரது நேரடி போட்டியாளராக கருதப்பட்ட பிரேம் குமார் துமால், கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். இதனால், முதலமைச்சர் பதவி பாஜகவின் ஜெய்ராம் தாக்கூருக்கு சென்றது.


பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், தேர்தலுக்கு முன்பாகவே, வீரபத்ர சிங்கின் மனைவியான பிரதிபா சிங், இமாச்சல் காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, நிலவும் சூழ்நிலையில், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் பிரதிபா சிங்கும், காங்கிரஸ் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவரான சுக்விந்தர் சிங் சுக்குவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.