இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ஆம் ஆண்டு, ஜனவரி 8ஆம் தேதியோடு முடிவடைகிறது. கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, அதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இமாச்சல பிரதேச தேர்தல் வரும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. அதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அன்று அறிவிக்கப்படுகிறது.


62 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறு உறுப்பினர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில், டெஹ்ராவில் இருந்து ரமேஷ் தவாலா, ஜவாலாமுகியில் இருந்து ரவீந்தர் சிங் ரவி, குலுவில் இருந்து மகேஷ்வர் சிங், பர்சாரில் இருந்து மாயா ஷர்மா, ஹரோலியில் இருந்து ராம் குமார் மற்றும் ராம்பூரில் இருந்து கவுல் நேகி ஆகியோர் பாஜக சார்பாக போட்டியிடுகின்றனர்.


 






புதன்கிழமை காலை 62 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டிருந்தது. முதல் பட்டியலில் அறிவிக்கப்பட்ட 62 வேட்பாளர்களில் 19 பேர் புதிய முகங்கள். ஐந்து மருத்துவர்களுக்கும் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலருக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.


சிம்லாவின் ஐஜிஎம்சி மருத்துவமனையின் மூத்த மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜனக் ராஜ்க்கு பார்மூரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அலோபதி மருத்துவர்களான ராஜேஷ் காஷ்யப் மற்றும் அனில் திமான் முறையே சோலன் மற்றும் போரஞ்சில் இருந்து களமிறக்கப்பட்டுள்ளனர். 


ஆயுர்வேத மருத்துவர்களான ராஜீவ் சைசல் மற்றும் ராஜீவ் பிண்டால் ஆகியோருக்கும் முதல் பட்டியலில் டிக்கெட் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் ஜே ஆர் ​​கட்வால், ஜந்துடா தொகுதியில் இருந்து மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியலில் 5 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். இந்திரா கபூருக்கு முதல் முறையாக சம்பாவில் இருந்து போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் சர்வீன் சவுத்ரி ஷாபூர் தொகுதியிலும், எம்எல்ஏ ரீனா காஷ்யப் பச்சாத் தொகுதியிலும், ரீட்டா திமான் இந்தோரா தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.


இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. 68 உறுப்பினர்கள் உள்ள சட்டபேரவையில், தற்போது பாஜகவுக்கு 43 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 22 உறுப்பினர்களும் உள்ளனர். இரண்டு சுயேச்சைகள் மற்றும் ஒரு சிபிஐ (எம்) எம்எல்ஏ உள்ளனர்.