இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் 68 தொகுதிகளை கொண்ட சட்டபேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள், வருகின்ற டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 


இமாச்சல பிரதேசம் : 


இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிவரை நிலவரப்படி, இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஷில்லாயில் அதிகபட்சமாக 77 சதவீத வாக்குகளும், சர்க்காகாட்டில் மிகக் குறைந்த 55.40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இமாச்சலத்தில் காலை 8 மணிக்கு தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு, படிப்படியாக வேகமெடுத்தது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. 


தனியார் வாகனத்தில் வாக்கு இயந்திரங்கள் :


காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிறகு முதல் ஒரு மணி நேரத்தில் வெறும் 5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியது. அதன்பிறகு, மதியம் 1 மணி நிலவரப்படி 37.19 சதவீத வாக்குகள் பதிவாகியது. தொடர்ந்து, நடைபெற்ற வாக்குப்பதிவின் அடிப்படையில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியது. 


இந்தநிலையில், விதிகளை மீறி தனியார் வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.


காங்கிரஸ் :


இமாச்சல் மாநில காங்கிரஸின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை தலைவர் பிரனய் பிரதாப் சிங், தலைமை தேர்தல் அதிகாரிக்கு அளித்த புகாரில், ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் மூலம் (ஸ்ட்ராங் ரூம்) கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. எனது விதான் சபா தொகுதியான ராம்பூரில் நடந்த இந்த நிகழ்வு முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. விதிமுறைகளின்படி இதுபோன்ற இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூம்க்கு எடுத்துச் செல்ல வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்கள் தேர்தலுக்கு முன்பு கமிஷன் அல்லது தேர்தல் அதிகாரிகளால் அனுமதி அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் இயந்திரங்கள் ஒரு தனியார் வாகனத்தில் மாற்றப்பட்டன, அவை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது தேர்தல் ஆணையத்திடமிருந்து முன் அனுமதி அல்லது கோரிக்கை பெறவில்லை.


ஆளும் பாஜக கட்சி தேர்தலை கேலிக்கூத்தாக்கி, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மட்டுமல்ல, குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் குறைக்கும் என்பது போல, இந்த விஷயத்தில் தயவுசெய்து உடனடியாக கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று புகார் தெரிவித்திருந்தார்.


மாதிரி நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், குற்றவாளிகள் மீது கிரிமினல் புகார் விரைவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.