இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 10 கோடி நிவாரணத் தொகை வழங்கியதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. இடரின்போது செய்யும் உதவியானது உங்களது ஒற்றுமை உணர்வை காட்டுகிறது.” என தெரிவித்தார். 


இமாச்சல பிரதேசத்தில் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்ப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவர் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு..” இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரருக்கு என் பாராட்டுகள். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சல பிரதேச அரசுக்கு ரூபாய் 10 கோடி வழங்கப்படும்” என தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.


மேலும், பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக, கடந்த (22-08-2023) காலை இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொலைபேசியில் தொடர்புகொண்டு, பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். 


இன்றைய நிலவரம்: 


இமாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை காரணமாக 17 வீடுகள் இடிந்து தரைமட்டமானதுடன், 105 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சிம்லா நகரில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இதன் காரணமாக 55க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.


மாநிலம் முழுவதும் கனமழைக்கு பிறகு, நிலச்சரிவு மற்றும் நிலம் சரிந்ததால் 4 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 800க்கும் மேற்பட்ட சாலைகள் மீண்டும் வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டன. சிம்லா-சண்டிகர், மணாலி-சண்டிகர், மண்டி-பதான்கோட் மற்றும் ஜலந்தர்-மண்டி ஃபோர்லேன் ஆகியவை 2 நாட்களாக மூடப்பட்டுள்ளன.


மாநிலம் முழுவதும் சாலைகள் மூடப்பட்டதால் 1250க்கும் மேற்பட்ட வழித்தடங்களின் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளன சிம்லா மற்றும் மண்டி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பால், தயிர், ரொட்டி, வெண்ணெய் மற்றும் காய்கறிகள் போன்ற தினசரி உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் விநியோகம் இரண்டாவது நாளாகவும் பெரும்பாலான பகுதிகளுக்குச் சென்றடையவில்லை.


கனமழை எச்சரிக்கை: 


இன்று ஆரஞ்சு அலர்ட்டும், நாளை மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பருவமழை வலுவிழக்க வாய்ப்புள்ளது என சிம்லா வானிலை ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் சுரேந்திர பால் தெரிவித்துள்ளார். 


பொதுமக்கள் கவனமாக இருக்கவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், நிரம்பி வழியும் ஆற்று வடிகால்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் முதல்வர் சுக்விந்தர் சுகு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவசர வேலை இருக்கும் போது மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.