பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப்பை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் பிரிவினையைக் கோரும் காலிஸ்தான் இயக்கத்தை தீவிரமாக ஆதரிக்கும் அம்ரித் பால் சிங்-ஐ பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். 


அம்ரித் பால் சிங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அம்ரித்பால் சிங் தப்பிவிட்டார். அவர் எப்படி பஞ்சாபில் இருந்து ஹரியானா தப்பினார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன


அம்ரித்பால் சிங் ஹரியானா தப்பியது எப்படி?


1. அவர் தப்பிச் செல்ல 5 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் ஒன்று உயர் ரக மெர்சிடீஸ் பென்ஸ். இவர் கடந்த 18 ஆம் தேதி அமிர்தசரஸில் இருந்து அந்த சொகுசுக் காரில் புறப்பட்டார். அதுவும் அவரது சொந்த கிராமமான ஜல்லுபூர் கேராவில் இருந்து கிளம்பினார்.


2. அவர் மெர்சிடீஸ் சொகுசு காரில் கிளம்பியது அறிந்து பஞ்சாப் போலீஸ் கமாண்டோக்கள் ஹரிகே பாலத்தில் காத்திருந்தனர். ஆனால் அம்ரித்பால் சிங்குக்கு பாதுகாப்பாக வந்த வாகனங்களில் ஒன்றில் இருந்த மெய்க்காப்பாளர்கள் பாலத்தில் இருந்த போலீஸ் பாதுகாப்பு குறித்து தகவல் கொடுஹ்தனர்.


3. இதனையடுத்து அம்ரித்பால் சிங் மெர்சிடீஸ் பென்ஸ் காரில் இருந்து மாறினார். மேலும் ஹரிகே பாலத்தைத் தவிர்த்துவிட்டு கோவிந்த்வால் ஷாஹிப் பகுதி வழியாக சட்லஜ் ஆற்றைக் கடந்துவிட்டார்.


4. பஞ்சாப் போலீஸார் அம்ரித்பால் சிங் ஹரிகே பாலத்தின் வழியாகவே வருவார் என்று நம்பி அங்கு முகாமிட்டிருந்த நிலையில் அவர் போலீஸுக்கு கல்தா கொடுத்துவிட்டு வேறு வழியில் பயணித்தார்.


5. அம்ரித்பால் சிங் மட்டும் கோவிந்தவால் ஷாஹிப் வழியாக சட்லஜ் ஆற்றைக் கடக்க, அவருடைய மெய்க்காப்பாளர்கள் வந்த வாகனங்கள் போலீஸுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் ஷான்கோட் வழியாக சென்றனர்.


6. அதேவேளையில், கோவிந்த்வால் ஷாஹிப் பகுதியில் அம்ரித்பால் சிங் பயணிப்பதை அறிந்த பஞ்சாப் போலீஸார் அந்தப் பகுதிக்கும் விரைந்துள்ளனர்.


7. இதற்கிடையில் மெர்சிடீஸ் பென்ஸில் இருந்து வேறு காருக்கு மாறிய அம்ரித்பால் சிங் அடிக்கடி வெவ்வேறு கார்களுக்கு மாறியுள்ளார். பின்னர் ஒருக்கட்டத்தில் அவர் துப்பாக்கி முனையில் ஒருவரை மிரட்டி அவரது பைக்கை பறித்துச் சென்றுள்ளார்.


8. அம்ரித்பால் அந்த திருட்டு பைக்கில் பின்னால் அமர்ந்து கொள்ள அதை அவரது அடியாள் பாப்பல்ப்ரீத் சிங் ஓட்டியுள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


9. மார்ச் 20 ஆம் தேதி வரையிலுமே அம்ரித்பால் சிங்கின் நடமாட்டத்தை பஞ்சாப் போலீஸார் டிராக் செய்துள்ளனர். பல்வேறு இன்ஃபார்மர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் பில்லாவூர் சென்றபின்னர் அவரும் அவரது கூட்டாளி பப்பால்ப்ரீத் சிங்கும் தங்கள் தோற்றத்தை மாற்றியுள்ளனர். அடையாளம் காண முடியாத அளவுக்கு வேறு தோற்றம் தரித்து அவர்கள் ஹரியானாவுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு பல்ஜித் கவுர் என்பவர் வீட்டில் தங்கியுள்ளனர். இரண்டு நாட்கள் ஷாபாத்திலேயே இருந்துள்ளனர். லுதியானாவில் இருந்து ஷாபாத் செல்ல ஒரு ஸ்கூட்டியை பயன்படுத்தியுள்ளனர். பல்ஜித் கவுர் வீட்டை அடையும் முன்னர் மூன்றாவதாக ஒரு இருசக்கர வாகனத்தை துப்பாக்கி முனையில் கைப்பற்றினர். ஆனால் அது பாதி வழியில் ரிப்பேர் ஆகி நின்றுள்ளது. 
 
10 போலீஸாரால் கைது செய்யப்பட்ட பல்ஜீத் கவுர் என்ற பெண் அம்ரித்பால் தன் வீட்டில் தங்கியிருந்தபோது வேறு உடைகளை வாங்கி மாற்றி, தலையில் தலைப்பாகை அணிந்து முகத்தில் மீசை ஒட்டிக் கொண்டார் என்று போலீஸில் தெரிவித்துள்ளார்.


நொடிக்கு நொடி சினிமா சஸ்பெண் போல் அம்ரித்பால் சிங் தப்பிச் சென்ற சம்பவம் அமைந்துள்ள நிலையில் போலீஸார் அவரை இன்னமும் தேடி வருகின்றனர்.