கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை முற்றுகையிட்ட மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்ப, மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நோபல் பரிசு வென்ற மலாலா இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரம், உலக அளவிலும் கவனத்தை பெற்று வருகிறது. இது குறித்து ட்வீட் செய்திருக்கும் மலாலா, “கல்லூரி நிர்வாகம் கல்வியா? ஹிஜாப்பா? என்பதை தேர்வு செய்து கொள்ளுமாறு மாணவிகளை கட்டாயப்படுத்துகிறது. ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்கள் ஓரங்கட்டப்படுவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில், மரணத்தின் இறுதிகட்டத்திற்கு சென்ற மலாலா உயிர் தப்பினார். அதனைத் தொடர்ந்து தனது கருத்துக்களை மலாலா இன்னும் வலுவாக முன் வைக்கத் தொடங்கினார். பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து போராடி வரும் மலாலாவுக்கு, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார். பெண்களின் உரிமை மட்டுமல்லாமல் சர்வதேச அமைதிக்காகவும் மலாலா குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா ஹிஜாப் விவகாரம் குறித்து மலாலா கருத்து தெரிவித்ததற்கு ஆதரவாகவும், எதிர் கருத்துகளும் எழுந்திருக்கிறது. பாஜக மேலிடப் பார்வையாளர் ரவி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “யார் இந்த மூலா (மலாலா), இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார். புர்காவுக்கு பின்னால் அல்லவா அவர் தன்னை ஒளித்து வைத்திருக்க வேண்டும்” என பதிவிட்டிருக்கிறார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 7-ம் தேதி முதல் கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறோரு வகுப்பில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கற்பித்தல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்