கர்நாடகாவில் வெடித்த ஹிஜாப் தொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்தாண்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அப்போதைய பாஜக அரசு தடை விதித்தது. மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக முழுவதும் போராட்டம் வெடித்தது.


ஹிஜாப் விவகாரம்:


இதற்கிடையே, இஸ்லாமிய மாணவிகள் சிலர், ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


ஆனால், ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்ற இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர். எனவே, இந்த வழக்கு அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.


இந்த நிலையில், ஹிஜாப் தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. கேரளாவில் மருத்துவ மாணவிகள் ஏழு பேர், அவர்களின் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஹிஜாப் அணிந்து கொண்டே அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக மாணவிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


கேரள மருத்துவ மாணவர்களின் கோரிக்கையால் வெடித்த சர்ச்சை.!


பொதுவாக, அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவர்கள் சில விதிகளை பின்பற்ற வேண்டும். சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட உடைகளை மட்டுமே மருத்துவர்கள் அணிய வேண்டும். ஆனால், தற்போது ஹிஜாப் அணிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக மாணவிகள் கடிதம் எழுதியிருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.


திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பை படிக்கும் மாணவிகள் எழுதிய அந்த கடிதத்தில், "எங்களின் மத நம்பிக்கைகளின்படி, முஸ்லிம் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் ஹிஜாப் அணிவது கட்டாயம். ஹிஜாப் அணியும் முஸ்லீம்கள், கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். மத நம்பிக்கை தொடர்பான ஆடைகளை அணிந்து கொண்டு, மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை அறை விதிமுறைகளை பின்பற்றவது கடினமாக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


உலகின் மற்ற பகுதிகளில் பின்பற்றப்படும் மாற்று உடைகளை பரிந்துரைத்து பேசிய மருத்துவ மாணவிகள், "லாங் ஸ்லீவ் ஸ்க்ரப் ஜாக்கெட்டுகள் மற்றும் அறுவை சிகிச்சை மேலாடை கிடைக்கின்றன. அது, பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வைப்பது மட்டும் இன்றி ஹிஜாப் அணியவும் வழி செய்கிறது. எனவே, அதை அணிய உடனடியாக அனு வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.


மாணவர்களின் கோரிக்கை குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் டாக்டர் லினெட் மோரிஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாணவர்களின் கோரிக்கையை இப்போதைக்கு ஏற்க முடியாது. ஆபரேஷன் தியேட்டர்களில் சர்வதேச விதி பின்பற்றப்படுகிறது. நோயாளியின் பாதுகாப்பு மிக முக்கியமானது" என்றார்.