மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி, பிகார் மாநிலம் பாட்னாவில் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வியூகம் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது.


டெல்லி அவசர சட்ட விவகாரம்:


இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே நடந்த காரசார விவாதம் பேசுபொருளாக மாறியது. டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி வந்தது.


ஆனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே இதுபோன்ற பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்தார்.


இந்த விவகாரத்தில், பாஜகவுடன் காங்கிரஸ் டீலிங் வைத்திருப்பதாகவும் அதனால்தான் காங்கிரஸ் முடிவு எடுக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது. மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை எதிர்கால எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க முடியாது என ஆம் ஆத்மி அறிவித்தது. இது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தியது.


ஆம் ஆத்மி அறிவிப்பால் அதிர்ந்து போன எதிர்க்கட்சிகள்:


இந்த நிலையில், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஹரியானா மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை சந்தித்ததை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தீப் பதக், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.


அப்போது, அவசர சட்டம் குறித்து பேசிய அவர், "டெல்லியில் அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் கருப்பு சட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதில் கட்சியின் பிரச்சாரம் கவனம் செலுத்தும். கறுப்புச் சட்டம் கெஜ்ரிவாலுக்கு எதிரானது அல்ல. 


மக்களுக்கு எதிரானது என்பதை நாங்கள் மக்களுக்குச் சொல்வோம். எதிர்க்கட்சிகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பாஜகவின் விருப்பம, மோடி அரசு தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் செய்த செயல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்போம். மோடி அரசு செய்த நான்கு விஷயங்களைப் பற்றி யாராவது சொல்லிவிட்டால், நான் அவர்களை பாராட்டுவேன்" என்றார்.


மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மோடி அரசு சீரழிக்கிறது என குற்றம்சாட்டிய அவர், "பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இருப்பினும், இது காங்கிரசை பொறுத்துதான் இருக்கிறது. காங்கிரஸ், திறந்த மனதுடன், அனைவரையும் அழைத்துச் செல்ல தயாராக இருந்தால், எதுவும் சாத்தியமாகும். ஆனால், அது திமிராக இருந்தால், விஷயங்கள் கடினமாகிவிடும்" என்றார்.