மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் ஒரு பெண் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கானா நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டதாக அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தார் வழியாக மும்பைக்கு பயணித்த பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்த முயல்வதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் மும்பை பிரிவு சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் குழு விமான நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டனர். சந்தேகத்திற்குரிய பயணி ஒருவரை இடைமறித்து சோதனை செய்தனர். அதிகாரிகள் அவரது பொருள்களை சோதனை செய்ததில், டிராலி பைகளில் துவாரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். அந்த பயணி கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தால் வருவாய் புலனாய்வு இயக்குனரக காவலில் வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அலுவலர்கள் டெல்லியில் கடத்தப்பட்ட கடத்தல் பொருட்களை டெலிவரி செய்ய இருந்த கானா நாட்டை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
கானா நாட்டைச் சேர்ந்த அந்த பெண் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் போதைப்பொருள் விநியோகம் செய்ய வந்தபோது கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தால் அனுமதியின் பேரில் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல, மும்பையில் கருப்பு கோகெயின் என்ற போதை பொருளை நாட்டிற்குள் கொண்டுவர சில சமூக விரோதிகள் முயற்சி செய்துள்ளனர். அதை, போதைப்பொருள் தடுப்பு முகமை தடுத்து நிறுத்தியது. போதைப்பொருள் தடுப்பு முகமையின் மும்பை பிரிவு, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி விமான நிலையத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த நபரிடமிருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளைக் கைப்பற்றியது.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கருப்பு கோகெயின் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், மோப்ப நாய்களாலும் அதை கண்டறிய முடியவில்லை.