Delhi Rain: டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

டெல்லியில் கொட்டிய கனமழை:

இடி மற்றும் மின்னலுடன் நள்ளிரவில் கொட்டிய கனமழையால், டெல்லியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மோதி பாக், மிண்டோ சாலை, டெல்லி விமான நிலைய முனையம் 1 ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மிண்டோ சாலை பகுதியில் தேங்கிய மழை நீரில் ஒரு கார் மூழ்கிய சம்பவமே, அங்கு பதிவான மழையின் அளவை உணர்த்தியுள்ளன. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை இரவு கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை மையம் முன்னரே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி டெல்லி மட்டுமின்றி அண்டை மாநிலமான ஹரியானாவின் பல்வேறு பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டியது.

மின்சாரம் துண்டிப்பு - பொதுமக்கள் அவதி

மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் இரவு முழுவதும் இருளில் மூழ்கினர். நள்ளிரவு 11.30 மணி தொடங்கி காலை 5.30 மணி வரையிலான 6 மணி நேரத்தில் டெல்லியில் 81.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகள் நீரில் மூழ்கின. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும், பாதியளவு நீரில் மூழ்கின. காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் அன்றாட பணிகளை மேற்கொள்பவர்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் அவதியுற்றனர். புழுதிக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன.

Continues below advertisement

விமான சேவை பாதிப்பு:

டெல்லி விமான நிலையம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்களது சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அதிகாலை அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சேவையை தொடங்குவதாக அறிவித்தது. காலை 7.30 மணி நிலவரப்படி, டெல்லிக்கு வரும் விமானங்கள் சராசரியாக 46 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்குகின்றன. 

இதனிடையே, இந்த மே மாதத்தில் மட்டும் மொத்தமாக 186.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி வரலாற்றிலேயே அதிக மழை பதிவான மே மாதமாக நடப்பாண்டு வரலாறு படைத்துள்ளது. 

தொடரும் மழை எச்சரிக்கை:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “டெல்லியில், மே 25 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக மணிக்கு 50 கிமீ வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.