UP Crime: திருமண வீட்டில் நடந்த மோதலை தடுக்க முயன்ற நபரை ஒரு கும்பல் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடித்துக் கொல்லப்பட்ட விருந்தாளி:

உத்தரபிரதேச மாநிலன் ஜான்பூர் மாவட்டத்தில், திருமணத்தின் போது ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற நபரை அடித்து கொன்றதாக4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை மாலை நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய சடங்கின்போது, டிஜே பாடலுக்கு நடனமாடுவதில் ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தேஜி பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்ரி எனும் கிராமத்தில் இந்த குற்றம் நிகழ்ந்துள்ளது. இதில் கைதானவர்கள் கபூர் சந்த், அஷோக் விஷ்வகர்மா, ரஜன் விஷ்வகர்மா மற்றும் லக்கி விஷ்வகர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

நடந்தது என்ன?

ஹைதர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் விஷ்வகர்மா, பூல்சந்த் விஷ்வகர்மா என்பவரது மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு வந்துள்ளார். சனிக்கிழமையன்று திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் பூர்த்தியான பிறகு டிஜே பாடல்கள் அங்கு ஒலிக்கப்பட்டுள்ளன. அதற்கு நடனமாடுவதில் திருமணத்திற்கு வந்தவர்கள் இடையே மோதல் வெடித்தும், வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட மணமகள் தரப்பினர் உடனடியாக வந்து, மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்களிடையே மோதல் வெடித்தது. இந்தமுறை அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ள தொடங்கியுள்ளனர்.

 அடித்துக் கொல்லபட்ட விருந்தினர்:

இதனை கண்ட அங்கிருந்த ரஞ்சித், மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றுள்ளார். சண்டை வேண்டாம், பிரிந்து சென்று அவரவர் வேலையை பாருங்கள் என மீண்டும் மீண்டும் ஆவேசமாக பேசி வலியுறுத்தியுள்ளார். ஆனால், அந்த கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இதனை கண்ட மணமகள் தரப்பினர், ரஞ்சித் தான், பிரச்னைக்கு காரணம் என கருதியுள்ளனர். மேலும் அவரை கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் திருமண வீடு, துக்க வீடாக மாறியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரஞ்சித்தின் உறவினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

தொடரும் குற்றங்கள்:

உத்தரபிரதேசத்தில் கொலை, பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே போதுமான கல்வியறிவு மற்றும் விழிபுணர்வு இல்லாததும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாததும் கூட காரணமாக கூறப்படுகிறது. அதிகப்படியான மக்கள் தொகையால் அந்த மாநிலத்தில் சட்ட-ஒழுங்கை பேணி காப்பாதும் கடும் சவாலான பணியாக தொடர்கிறது.