கேரளாவில் அடித்து நொறுக்கும் கனமழையால் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. கடுமையான மழையால் கோட்டயம் பகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்கு இராணுவம் மற்றும் விமானப்படையின் உதவியை மாவட்ட ஆட்சியர் நாடியுள்ளார். இதற்கிடையே கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
கோட்டயம் மாவட்டத்தில் மட்டுமே 4 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கூட்டிக்கல் பகுதி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கோட்டயம் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. விரைவில் இந்திய ராணுவம், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு வருமென அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல குடியிருப்பு பகுதிகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆறுகள், கால்வாய்கள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளன. மிகவும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
கடுமையான வெள்ளத்தில் சிக்கிய ஒரு அரசுப் பேருந்தில் இருந்து மக்களை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திடீர் வெள்ளத்தால் பேருந்தின் ஜன்னல் வரை மூழ்கிய நிலையில் அதில் இருந்தவர்களை பொதுமக்களும், மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
இதற்கிடையே கோட்டயம் வெள்ளப்பகுதி தொடர்பாக அரசின் உதவி மையங்களும், இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.