இந்தியாவின் முன்னணி உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ஜோமோட்டோ. இதுபோன்ற உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் பலரும் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சவுரப் பஞ்ச்வானி என்ற நபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுரப் பஞ்ச்வானி ஒரு உணவு வீடியோ லாக்கர் ஆவார். அவர் ஜோமோட்டாவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவை ஆர்டர் செய்ய வந்த நபரை பார்த்து சவுரப் பஞ்ச்வானிக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உணவு ஆர்டர் செய்ய வந்த நபர் சவுரப் பஞ்ச்வானி ஆர்டர் செய்த உணவுடன் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
சவுரப் பஞ்ச்வானிக்கு உணவு ஆர்டர் செய்ய வந்த நபர் தன்னுடைய சுமார் 2 வயதான பெண் குழந்தையை தனது நெஞ்சில் தொட்டில் போன்று கட்டி சுமந்துள்ளார். அவருடன் சற்றே வளர்ந்த அவரது மூத்த மகனும் உள்ளான். அவரிடம் சவுரப் பஞ்ச்வானி இதுதொடர்பாக கேட்டதற்கு, தன்னுடைய நாள் முழுவதும் தன்னுடைய ஆர்டர்களை டெலிவரி செய்ய தன் இரு குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சவுரப் பஞ்ச்வானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த ஜோமோட்டோ பணியாளர் தன்னுடைய நாள் முழுவதும் தன்னுடைய இரு குழந்தைகளுடனும், சூரியனுடனும் செலவிடுகிறார். அவரிடம் இருந்து நாம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை 79 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளார். 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அவரது இந்த வீடியோவை ஜோமோட்டோ நிறுவனமும் பார்த்து பதில் அளித்துள்ளது.
ஜோமோட்டோ அளித்துள்ள இந்த பதிவில், “ ஹாய் சவுரப். தயவு செய்து உங்களது ஆர்டர் தகவல்களை அனுப்புங்கள். அப்போதுதான் எங்களால் அந்த நபரை கண்டறிந்து அவருக்கு உதவிகள் செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளது. மேலும், பலரும் அந்த நபருக்கு தக்க உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.