உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவரின் கால்களை பிடித்து மாடியிலிருந்து தலை கீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியரை காவல் துறை கைது செய்து உள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் சோனு யாதவ் என்ற மாணவர் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அருகில் மதிய உணவு இடைவெளி நேரத்தில் சக மாணவனை கடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடி வாங்கிய மாணவன் சோனு யாதவ் மீது ஆசிரியர்களிடம் புகார் அளித்து உள்ளார். இந்த புகார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மாவுக்கு எட்டியது. ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியர் மனோஜ், சக மாணவனை கடித்ததற்காக மாணவன் சோனு யாதவை பள்ளியின் மேல் மாடிக்குக்கு இழுத்துச் சென்று உள்ளார். அங்கு மாணவனின் கால்களை பிடித்து தூக்கி தலைகீழாக வைத்த தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, தடுப்புச் சுவருக்கு வெளியே சோனு யாதவை அந்தரத்தில் தொங்கவிட்டார்.


தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த மாணவன் சோனு யாதவிடம், அவர் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்குமாறும், இல்லாவிட்டால் அப்படியே கீழே தூக்கி வீசிவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா. தலைகீழாக தொங்கிய மாணவன் பயத்தில் கதறி அழும் சத்தம் கேட்டு அங்கு குவிந்த மாணவர்களும், மற்ற ஆசிரியர்களும் மாணவனை விட்டுவிடுமாறு தலைமை ஆசிரியரிடம் வற்புறுத்தினர். அங்கிருந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தலைமை  ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா மாணவன் சோனு யாதவை விட்டார். இதை பள்ளியில் இருந்த யாரோ வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலானது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து உள்ளனர்.



இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மனோஜை மிர்சாபூர் போலீசார் கைது செய்தனர். தலைமை ஆசிரியர் மீது சிறுவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மாணவர் சோனு யாதவின் தந்தை ரஞ்சித் யாதவ், “தலைமை ஆசிரியர் செய்த செயல் தவறானது. ஆனால், அன்பின் வெளிப்பாடாகவே அவர் அவ்வாறு செய்து இருக்கிறார். எனவே இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.” எனத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியர்  தெரிவிக்கையில், ”மாணவன் சோனு யாதவுக்கு குறும்புத்தனம் அதிகம். குழந்தைகளையும் ஆசிரியர்களையும் சோனு கடித்து விடுகிறார். அவரது தந்தைதான் என்னிடம் கண்டிக்க சொன்னார். பயம் காட்டுவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்.” எனத் தெரிவித்து உள்ளார்.